St CEYLONCNEWS: தீவிரமடையும் சிறுபான்மைக்கு எதிரான கருத்தியல் போர்.... பின்னணியில் சீனாவா? - இப்னு அஸ்அத்

சனி, 20 பிப்ரவரி, 2021

தீவிரமடையும் சிறுபான்மைக்கு எதிரான கருத்தியல் போர்.... பின்னணியில் சீனாவா? - இப்னு அஸ்அத்

முஸ்லிம் தீவிரவாதம் பேசி மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் கொரோனாவுக்கு மத்தியில் ஜனநாயக சோசலிச குடியரசுக்கு பதிலாக தேசிய பௌத்த ஆட்சி இடம்பெறும் காலமிது.

இன்றைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் கொழும்பு பங்குச் சந்தையின் எதிரும்

புதிருமான விலைச்சுட்டெண் மாற்றங்கள், 200 ரூபா வரை அதிகரித்துள்ள அமெரிக்கா டொலரின் பெறுமதி, வேலையின்மை மற்றும் வேலையிழப்புகள், ஸ்திரத்தன்மையற்ற பொருளாதார தீர்மானங்கள், சந்தைகளில் விலை குறையாது வர்த்தமானிகளில் மாத்திரம் விலை குறைக்கப்படும் பொருட்கள், சர்வதேச பிராந்திய தேசிய பொதுப் பிரச்சினைகளில் மௌனம் சாதித்து கிராமிய பிரச்சினைகளில் கரிசணை காட்டும் ஜனாதிபதி என பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நாடு சென்ற வண்ணமுள்ளது.

மறுபுறம் சிறுபான்மை சமூகத்தின் மீதான அடிப்படை மத, அரசியல் உரிமைகளை மீறும் விதத்தில் இடம் பெறும் விடயங்களான ஈழப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறையாக விசாரிக்காமை, கொரோனாவில் மரணித்தால் பலவந்த எரிப்பு, மாகாண தேர்தல் நடாத்தாமல் காலம் கடத்துதல், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் காரணமின்றி இடம்பெறுகின்ற கைதுகள், முஸ்லிம் தனியார் சட்டம், அரபுக் கல்லூரிகளை தடை செய்வதற்கான முயற்சிகள், இஸ்லாமிய வங்கியல் முறைமையை தடை செய்யவுள்ளதாக கூறப்படும் நேர்காணல்கள். தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் வட கிழக்கு தமிழ் முஸ்லிம் பிரதேச மக்களின் காணி அபகரிப்பு என கடந்த 15 மாதங்களுக்குள் இவ்வாட்சியில் சிறுபான்மைக்கு எதிராக இடம்பெறும் விடயங்களை பட்டியலிடலாம்.

இவ்வாறு சிறுபான்மைக்கு எதிராக கருத்தியல் மற்றும் சட்டவியல சார் தாக்குதலொன்று இடம் பெறும் தருணத்தில் அத்தரப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ஜனாதிபதியின் ஊடக அறிக்கைகள், விசேட உரைகள் அமைந்துள்ளன. நான் தான் நீங்கள் தேடிய தேசிய பௌத்த தலைவன், நந்தசேனாவுக்கு இரண்டு முகங்கள் உள்ளது அதில் ஒன்று சாந்த முகம் என்று வீர வசனம் பேசி தேசிய பௌத்த அரசை பலப்படுத்திய வண்ணமுள்ளார்.

இவற்றில் சிறுபான்மைக்கு எதிரான அத்துமீறல்களின் போது சிவப்பு அறிவித்தல்கள் மற்றும் ஊடகறிக்கைகள் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு, ஏனைய சிவில் சமூக அமைப்புகள் சிறுபான்மைக்கு ஆதரவாக தற்போதைய அரசிற்கு அழுத்தம் வழங்கினாலும் அவற்றை எல்லாம் காதில் வாங்காமல் பெப்ரவரி 22ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 46 கூட்டத் தொடர் ஆரம்பமாகவவுள்ள நிலைமையில் பிரதமர் உட்பட அமைச்சர்களில் தாம் எடுத்துள்ள முடிவுதான் சரி. சர்வதேச அழுத்ததிற்கு அடிபணிய மாட்டோம் என வீர வசனம் பேசிய வண்ணமுள்ளனர்.

இவ்வாறு தாம் தவறிழைத்த பின்னரும் தாம் நீதிக்கு அடிபணிய மாட்டோம் என உலகின் மிகச் சிறிய நாடொன்று சர்வதேச நாடுகளுக்கே சவால்விடும் விதத்தில் பேசுவதாக இருந்தால், இவ்வரசிற்கு ஆதரவாக சர்வதேசத்தில் பேச சில நாடுகளை அரசு திரைமறைவில் உருவாக்கி வைத்துள்ளமையாகும்.

இப் பின்னணியில் தற்போதைய அரசின் வெளிநாடுகளுடனான உறவை அவதானிக்கையில் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தமது செல்வாக்கை இலங்கையில் நிலைநிறுத்த பல்வேறு வகையான முயற்சிகளை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷா அவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட வண்ணமுள்ளனர்.

அண்மைய நாடான இந்தியாவின் மோடி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவான கொள்கையை பேணிக்கொண்டு வந்த நிலையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனை ஒப்பந்தத்தை மீறியமை மற்றும் 400 மில்லியன் அமெரிக்கா கடன் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை என்பன இலங்கை இந்தியாவிற்கு இடையிலான விரிசலான போக்கை காட்டுகிறது. என்றாலும் இந்தியா குறித்த கடன் விடயத்தில் ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தின் படி இம்மாதம் கடன் ஒப்பந்தம் முடிவடைந்தாக தெரிவித்தது. என்றாலும் இந்தியாவின் கடனைக் கொடுத்து மறுநாள் சீனாவிடம் கடன் வாங்குவதாக இருந்தால் ஒப்பந்தத்தை விட அழுத்தம் தான் காரணம் என புலனாகின்றது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அது ஒரு நாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கொள்கின்ற பிரதான ஒப்பந்தம் MCC ஆகும். 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட MCC திட்டத்தை இலங்கையில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அன்றைய உள்நாட்டு யுத்த நிலமை காரணமாக அவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட முடியவில்லை. மீண்டும் நல்லாட்சி அரசில் அவ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்த போதிலும், தற்போதைய அரசாங்க உறுப்பினர்களின் எதிர்ப்புகளால் இலங்கையின் இரண்டு அரசினாலும் அதில் கைச்சாத்திட முடியவில்லை. இறுதியாக MCC பணிப்பாளர் சபையே கடந்த டிசம்பரில் இலங்கைக்கான ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தது.

அதாவது இலங்கையுடன் நட்புறவை பேண முற்பட்ட இந்தியா, அமெரிக்காவுடனான தற்போதைய உறவு விரிசல் நிலையில் உள்ளது. இதே விரிசலுடன் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் விவகாரம் தலைதூக்கியுள்ளது.

மறுபுறம் சீனாவுடனான இலங்கைக்கான தொடர்பு வணிகத் துணைச் சேவைகளான போக்குவரத்துச் சேவைக்கான வீதிகள், துறைமுகம், விமானநிலையம் அமைத்தல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்ததாக உள்ளன. யுத்தத்தின் பின்னரான நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பெருமளவு கடன் சீனாவிடம் தான் பெறப்பட்டுள்ளது.

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வந்த போது இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை என்று பெருமை பேசியது. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் சீனாவுடன் இரண்டு கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு 2, 000 மில்லியன் கடன்பெற்றுள்ளது.

இதில் 1, 500 மில்லியன் அமெரிக்கா டொலர் இந்தியாவிற்கான கடன் 400 மில்லியன் திருப்பிச் செலுத்திய மறுநாளே பெறப்பட்டுள்ளது. அதாவது இலங்கையிடம் கடன் செலுத்த முடியாத ஒரு தருணத்தில் தான் கொழும்பு துறைமுக கிழக்கு முனை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமை காரணமாக ஏற்பட்ட விரிசலிலே அவசரமாக இந்தியா கடனை திருப்பிப் கேட்கக் காரணம். தருணம் பாத்திருந்த சீனாவும் அந்த வாய்ப்பில் இலங்கையின் வட பகுதியில் உள்ள மூன்று தீவுகள், 21 தேயிலைத் தோட்டங்கள், மத்திய வங்கி தலைமையழுவலக கட்டிடம் என்பவற்றை கையகப்படுத்தும் நோக்குடன் 1500 மில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளது.

வரலாற்று ரீதியில் ஆரம்பம் முதல் இன்று வரை இந்தியா இலங்கை தொடர்புகள் போர், யுத்தவியல் சார்ந்தாக இருந்தாலும், இலங்கை சீனா உறவுகள் நட்புறவு மற்றும் பௌத்த மதம் சார்ந்த தொடர்புகளாகவே காணப்படுகின்றது. தற்போதும் இலங்கை சீனா உறவில் மிக நெருக்கமான உறவு காணப்படுகின்றது. இதனால்தான் கடந்த ஒக்டோபரில் இலங்கை வந்த சீனா உயர்மட்டக் குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அழுத்தங்களின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.

சீனாவின் உள்ளக நிலமையை அவதானிக்கையில் அதுவும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்கின்ற பௌத்த நாடுகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு நாடுகளில் அரபு வசந்தம் ஏற்பட்டது போல் குறிப்பாக 2013, 2014 களில் ஆசிய பௌத்த நாடுகளில் முஸ்லிம்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனத்திற்கும் எதிராக பௌத்த தீவிரவாத நடவடிக்கைகளும் படிப்படியாக அரங்கேறத்துவங்கின.

2014 இல் அளுத்கம கலவரத்தில் துவங்கி இன்று அரச ஆதரவுடன் முஸ்லிம் கொரோனா ஜனாஸாக்களை எரித்தல் மற்றும் எதிர்காலத்தில் முஸ்லிம் சட்ட, கல்வி, வங்கியல் நடவடிக்கைகளும் தடை செய்யப்படும் என அரச அமைச்சர்களே கூறும் அளவிற்கு முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தியல் போர் தீவிரமடைந்துள்ளது. இவை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த சில அத்துமீறல்களாகும். இதற்கு மேலாக தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் காணி அபகரிப்பு, தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் பௌத்தர்களை குடியேற்றுதல் என பல விடயங்களை எடுத்துக் கூறலாம்.

தற்போது இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள மியன்மார், உய்குர் இன மக்கள் பற்றி தவறான செய்தியை வெளியிட்டதாக கூறி பி.பி.சியை தடை செய்த சீனா ஆகிய நாடுகளின் கடந்த ஐந்து வருட நடவடிக்கைகளை அவதானித்தால், மியன்மாரில் ரொஹிங்யா முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு, சீனாவில் உய்குர் மற்றும் ஹூய் இன முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு என்பன பௌத்த பெரும்பான்மை மற்றும் அரச ஆதரவுடன் இடம்பெறுகின்ற தீவிரவாத நடவடிக்கையாகும்.

மேற்படி இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது உயிருடன் எரித்தல், பெண்களின் கற்பழித்தல், சிறுவர்கள் முதியோர்களை கொலை செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களும், யுத்த குற்றங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே மியன்மாரில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்க வந்தபோது, ரஷ்யாவும், சீனாவும் எதிர்த்துப் பேசி மியன்மாரைக் காப்பாற்றியுள்ளது.

உலகில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலும் பலஸ்தீன முஸ்லிம்கள் விடயத்தில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. பலஸ்தீன முஸ்லிம்கள் விடயத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களும் பலமுறை மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து சந்தர்ப்பத்திலும் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலைக் காப்பாற்றியுள்ளது.

இவ்வாறு தான் தற்போது இலங்கையும் சிறுபான்மை மக்கள் விடயத்தில் மனித உரிமைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கமோ தாம் அவற்றை முகங் கொடுக்கத் தயார் என வீர வசனம் பேசுகின்றது. இதற்கான பிரதான காரணம் இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்களின் போது ஆதரவளிப்பதாக தெரிவித்த பாதுகாப்புச் சபையின் நிரந்த உறுப்புரிமை நாடான சீனாவின் ஆதராவாகும்.

ஈழப் போர் முடிவடைந்ததன் பின் பலமுறை இறுதி யுத்தத்தின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டாலும், இவ்வாண்டு தான் இலங்கை முஸ்லிம்கள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை அரசின் மீதான குற்றங்களுக்கு ஆதரவளிப்பதற்கு அதாவது இலங்கை அரசுக்கு எதிராக ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இதற்கான பிரதான காரணம் கொரோனாவில் மரணித்தவர்களை பலவந்தமாக எரிப்பதாகும். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் இது மற்றுமல்ல மேலும் பல உரிமை மீறல்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலைமையில் எதிர்வரும் 22 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறப்பட்ட போது மௌனம் காத்தாலும் பிரான்ஸின் கார்ட்டூன் சர்ச்சையில் காரசாரமாக பேசி இலங்கை முஸ்லிம்களின் மனதில் இடம் பிடித்தவரே இம்ரான் கான்.

இலங்கையைப் போன்று சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ள ஒரு நாடே பாகிஸ்தான். பாகிஸ்தான் அண்மையில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள பாகிஸ்தானின் பிரபல பூங்காவான தலைநகர் இஸ்லாமபாத்தில் உள்ள ஏ 9 பூங்காவை 50,000 கோடி பாகிஸ்தான் ரூபாவிற்கு அடகு வைக்க முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா இலங்கை முருகல் மற்றும், இலங்கை சீனா நட்புறவு போன்றே இந்தியா பாகிஸ்தான் முருகல்நிலை, பாகிஸ்தான் சீனா நட்புறவு என்ற கொள்கையை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. எனவே அதே கொள்கையுள்ள இலங்கையுடன் நட்புறவைப் பேணி தமது சீனா, இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்தவே இலங்கை வருகிறார்.

இலங்கைக்கு வருகைதரும் இம்ரான்கானுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அச்சந்தர்ப்பத்தில் கொரோனாவில் மரணித்தோரை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து அரசிற்கு அழுத்தம் கொடுப்பார் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.

கொரோனாவில் மரணித்தோரை எரித்தலா? அடக்குதலா என்பது பற்றி ஊடகங்கள் அறிக்கை விட்டாலும், பாராளுமன்றத்தில் உரையாடினாலும், அமைச்சரவை தீர்மானம் எடுத்தாலும் அதனை நடைமுறைப்படுத்த ஏற்கனவே வெளிவந்த 2170/08 ஆம் இலக்க 2020/04/11 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானியை வாபஸ் பெற வேண்டும் அல்லது திருத்தி புதியதொரு வர்த்தமானி வெளியிட வேண்டும். அதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சுக்கே உள்ளது.

கடந்த வாரம் சபநாயகரால் புறந்தள்ளிய எஸ். எம் மரிக்காரின் கேள்விக்கு நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் ஒற்றை வார்த்தை கூறியதும் வாழ்த்துப்பாடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அவதானிக்கையில் குறித்த விடயத்தில் தீர்வாக வர்த்தமானிதான் வரவேண்டும் என்பதும் தெரியாதவர்களா? எனச் சிந்திக்க தூண்டுகிறது.

இவ்வார்த்தையானது இலங்கையில் கொரோனாவில் மரணித்தோரை பலவந்தமாக எரிக்கப்படும் விடயம் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகி, தற்போது இலங்கை வருகை தரவுள்ள இம்ரான்கான் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் பிரயோகிக்க இருந்த முஸ்லிம்களின் திட்டத்தை பலவீனப்படுத்த மேற்கொண்ட திட்டமாகும்.

பிரதமரின் சிங்கள வார்த்தையும் பல மொழிகளில் சர்வதேச மட்டத்தில் வலம்வந்து பத்து மணித்தியாலத்தில் இம்ரான்கானிடம் இருந்து உருதுவில் பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியும் வந்துவிட்டது. கோபத்துடன் இலங்கை வருவார் என எதிர்பார்த்த இம்ரான்கான் இனி சாந்தமாகத்தான் வருவார்.

மனித உரிமைப் பேரவை நடைபெறவுள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள சீனாவின் ஆதரவுடன் இலங்கை தயார் ஆகினாலும் பாகிஸ்தான் பிரதமரின் வருகை எவ்வாறு குறித்த விடயத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதும் கலந்தாலோசிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மனித உரிமைப் பேரவையானது 47 நாடுகளைக் கொண்ட ஓர் சர்வதேச அமைப்பாகும். அவற்றில் 15 நாடுகளைக் கொண்ட பொதுச் சபை உள்ளது. அதன் காலப்பகுதி மூன்று ஆண்டாகும். அதில் 2021 ஜனவரி முதல் அமுலாகும் மூன்று வருடத்திற்கு பாகிஸ்தான், சீனா, நேபாளம், ரஷ்யா போன்ற நாடுகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றன.

மனித உரிமைப் பேரவை என்பது ஒரு தேர்தல் முறைமை தீர்மானமெடுத்தலாகும். முதன்முறையாக இலங்கைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவின் ஆட்சிக்காலத்தில் 2012 ஆம் ஆண்டு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அன்று இலங்கை தோல்வியடையும் பட்சத்தில் ஜனாதிபதி மின்சாரக் கதிரை ஏறுவார் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அன்று இடம்பெற்ற வாக்களிப்பில், மனித உரிமை பேரவையில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. இலங்கைக்கு எதிராக பெரும்பான்மை வாக்கு காணப்பட்டாலும் எதிர்பார்க்கப்பட்ட மின்சாரக் கதிரை மரண தண்டணை, சர்வதேச விசாரணை என்பன இடம்பெறவில்லை. அதாவது கண்துடைப்பு பிரேரணையாகவே அது அமைந்தது.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகளில் சீனா, ரஷ்யா உட்பட அதிகளவான முஸ்லிம் அரபு நாடுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் அரபு முஸ்லிம் வாக்குகளை திசை திருப்புவதில் இலங்கை முஸ்லிம் தலைவர்களே காரணம் என்பதும் மறுக்க முடியாது.

இதற்கென அன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொதுபல சேனா முன்வைக்க துவங்கிய சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் ஆன்மீக, அரசியல் தலைமைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்றிருந்தது வரலாறாகும். இன்று நீதியமைச்சராக அலிசப்ரி செயற்படுவது போன்று அன்று ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக செயற்பட்டார். ஆனால் இன்று அவ்வாறான ஒரு ஆதரவை முஸ்லிம் தலைமைகளிடம் பெறுவதற்கு தடையாக உள்ளது அவர்களே போசித்த பௌத்த தீவிரவாதமாகும்.

இந்நிலையில் இலங்கைக்கான முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இம்முறை இம்ரான்கான் மூலமே பெறத் திட்டமிட்டுள்ளது போல் தெரிகின்றது. ஏனெனில் அங்கு தனிநாடாக இருந்து கூட்டு அடிப்படையிலே வாக்குகள் கிடைக்கின்றன. மேற்குறித்த 47 நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளின் குழு (13), ஆசியா-பசிபிக் நாடுகளின் குழு (13), கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் குழு (6), லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் குழு (8), மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களின் குழு (7) எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 15 அரபு நாடுகளின் விவகாரத்தில் பாகிஸ்தான் தலைமைத்துவம் வகிக்கின்றது.

இம்முறையும் பிரேரணை அமெரிக்கா சார்ந்ததாக காணப்படுவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய 22 நாடுகள் இலங்கைக்கு எதிராகவும் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகுதி 25 நாடுகளில் இந்தியா உட்பட அரபு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பது இலங்கை சிறுபான்மை சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கை சிறுபான்மை முஸ்லிம் சமூகமானது தற்போது மரத்தால் விழுந்தவனை மாடு குத்துவதுபோல் உள்ளது. அதாவது கொரோனாவில் மரணித்தோரை பலவந்தமாக எரித்து கடந்த 10 மாதங்களாக முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியாக தாக்கி அதற்கு மேலால் பாதுகாப்பு அமைச்சரின் விரைவில் மத்ரஸா பாடசாலை, இஸ்லாமிய வங்கி முறை நீக்கப்படும் போன்ற கருத்துக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு எதிரான தொடர்ச்சியான கருத்துக்கள் உள்ளன. என்றாலும் நீதியைமச்சரின் வார்த்தை வெந்த புண்களுக்கு மருந்திடுவது போல் உள்ளது. அதாவது முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் நீக்க இடமளிக்க மாட்டோம் என்பதாகும். என்றாலும் அவர் தொடர்ந்து கூறுகையில் ஒரே நாடு ஒரே சட்டமென முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன்றி அனைத்து தனியார் சட்டங்களையும் நீக்குவதன் மூலமே மேற்கொள்ள முடியுமெனத் தெரிவித்தார்.

இனி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு யாப்பில் பொதுச் சட்டமாக பௌத்த சட்டத்தை அறிமுகப்படுத்தி விட்டு அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்படுமா என்பதும் ஒரு சந்தேகமாகும்.

இலங்கையின் தனிநபர் கடன் 669,981 ஆக அதிகரித்துள்ள நிலையில் 69 இலட்சம் உப்பட அனைவருக்கும் உள்ள பொருளாதார பொதுப் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசு தன் பலவீனத்தை மறைக்க எடுத்துள்ள ஒரு ஆயுதமே இனவாதக் கருத்தியல் போர்.

இலங்கையின் வட்டி வருமானத்தில் வாழும் சீனாவோ தமது முதலீட்டையும், இலங்கையை கொள்வனவு செய்யும் நடவடிக்கையையும் பற்றி சமூகம் சிந்திக்காமல் இருப்பதற்கு மறைமுகமாக அப்போரிற்கு உதவிய வண்ணமுள்ளது.

-இப்னு அஸ்அத்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக