St CEYLONCNEWS: போராட்டத்தைக் கைவிடுக! - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்

வியாழன், 31 டிசம்பர், 2020

போராட்டத்தைக் கைவிடுக! - இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்


இன்று (31.12.2020) கொழும்பில் நடைபெறவிருக்கும் "ஜனாசா எரிப்புக்கு எதிரான" ஆர்ப்பாட்டம் தொடர்பாக ‘இனவாதத்திற்கு எதிரானதும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம்’ விடுக்கும் அறிக்கை!

இலங்கை அரசாங்கம் தனது இனவாத ஒடுக்குமுறையை , மரணிக்கும் உடல்களை கட்டாயப்படுத்தி எரிக்கும் ”அடிப்படை மக்களின் உரிமை மறுப்பினை ” தீவிரப்படுத்தி தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த கொடும் ஒடுக்குமுறையானது மத உரிமைமட்டுமன்றி, மக்களின் அடிப்படை ஜனநாயக , மனிதஉரிமைகளுடனும் தொடர்பானது, பின்னிப் பிணைந்தது.இத்தகைய அநீதிகள் நடைபெறும்போது மௌனமாக இருப்பது தவறாகும். அதேசமயம் அதற்கெதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் சரியான முறையிலும் , அரசியல் தன்மையுடனும் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.
விஞ்ஞான ,அறிவியல் காரணங்கள் ஏதுவுமின்றி முற்றுமுழுதான இனவாத நோக்குடன் முஸ்லிம்களினதும் கிருஸ்தவர்களினதும் ஒருபகுதி இந்துக்களினதும் மதஉரிமையையும், இறந்தவர்களுக்கு உரியமுறையில் மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்யும் உரிமையையும் மறுக்கிறது இந்த இனவாத அரசு.
இது முஸ்லிம்களின் பிரச்சினைமட்டுமன்று. இது ஒட்டுமொத்த முழு இலங்கையினதும் ஜனநாயகப் பிரச்சினை. இந்த அரச அநீதிக்கு எதிராக இன மத வேறுபாடின்றி , தற்போது மக்கள் ஒன்றுதிரண்டு அரசியல், சமூகத்தளங்களில் போராடுவது இருண்டவானில் ஒரு நம்பிக்கை கீற்றை தோற்றுவித்திருக்கிறது..மறுபுறத்தில் தனது அரசதிகார ஒடுக்குமுறைக்கு எதிராக இப்போது உருவாகி வரும் மக்கள் ஐக்கியத்தைக் கண்டு அரசு அச்சம் கொண்டுள்ளது.
இன்று நாடு எதிர்நோக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வழிதெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் இலங்கை அரசு, நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.
இலங்கை வரலாற்றை நீங்கள் கூர்ந்துபார்த்தால், இப்படியான வங்குரோத்துநிலை ஏற்படும் தருணங்களில் எல்லாம், இலங்கை அரசாங்கம் இனவாதத்தினையும், மதவாதத்தினையும் கையிலெடுத்து, மக்களை திசைதிருப்பி , தனது அதிகாரத்தினை பாதுகாத்து வந்துள்ளது.
நாடு தழுவிய ரீதியிலும், சர்வதேசரீதியாகவும் இப்போது விரிவடைந்துவரும் , உரிமை மறுக்கப்படும் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளுக்கான ஒன்றுபட்ட போராட்டத்தை சிதைப்பதற்கு இலங்கை அரசு சகல வழிகளிலும் முயல்கிறது. அதில் ஒன்றுதான், ஜனநாயகத்துக்கும் மனிதஉரிமைக்காகவும் மக்கள் நடத்துகின்ற நியாயமான இப்போராட்டத்தை முஸ்லிம்களின் மதஉரிமையை மட்டும் முதன்மைப்படுத்தும் குறுகிய போராட்டமாக சித்தரிப்பதாகும்.
இதற்காக,சிங்களத்தரப்பில் இருந்து தமக்கு சார்பான பௌத்த பிக்குகளை களத்தில் இறக்குவதும், அதற்கு ஏட்டிக்குப்போட்டியாக முஸ்லிம்மதஅமைப்புகளை களத்தில்இறக்குவதும் என்பதாகும்.கடந்தகாலத்திலும் இதனையே இவர்கள்செய்து, இதில் வெற்றி கண்டுள்ளனர் .
பரந்துபட்ட மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டம் முஸ்லிம்களின் மதப்போராட்டமாக இப்போது மேலும் திரிபுபடுத்தப்படப் போகிறது.மற்ற சமூகங்களிடமிருந்து முஸ்லிம்களை தனிமைப்படுத்த இதனைவிட விட வேறு ஆயுதம் அவர்களுக்கில்லை.
எனவே,இந்நோக்கில் கடந்த வாரம் முதல் அரசின் ஆதரவுடன் இயங்கும் இனவாதசக்திகள், மதஅமைப்புகள் ஏட்டிக்குப் போட்டியாக மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை இலங்கையில் நடைபெற்ற இனவாத வன்செயல்கள் அனைத்தும் அரசின் அனுசரணையுடனே நடந்துள்ளன என்ற உண்மையை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வினவாத , மதஅமைப்புகளின் சிறுசிறு செயற்பாடுகளுக்குக்கூட, அதிக முக்கியத்துவம் அரசாங்க சார்பு ஊடகங்களாலும், இனவாத ஊடகங்களாலும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் சாதாரண சிங்கள மக்களை உண்மையில் இருந்து திசை திருப்புவர்.



பாதிக்கப்படும் சமூகங்களின் , அடிப்படை உரிமைகளுக்கான நியாயமான கோரிக்கையை காயடிக்கும் வகையில், இலங்கையிலுள்ள முஸ்லிம் மதஅமைப்புகளை அரங்கத்திற்கு கொண்டு வருவதன்மூலம் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான கோரிக்கையை, ஒரு மத விவகாரமாக மட்டும் குறுக்கி, முஸ்லிம்களை மட்டும் தனியாக்கி மேலும் சிக்கலுக்குள் தள்ளும் அரசியல் கபடத்திட்டத்தினை இட்டும் , இதன் ஆபத்துக்களை தெரிந்தும், இன்னும் மௌனமாக இருப்பது , ஆபத்தான பின்விளைவுகளை
கொண்டுவர வழி வகுத்துவிடும்.
இப்பின்னணிகளையும், இதன் பின்னுள்ள ஆபத்துக்களையும் புரிந்துகொண்டு , நடந்து வரும் போராட்டங்களை அனைத்து மக்களினதும் மனித உரிமைக்கான , ஐக்கியப்பட்ட போராட்டமாக , அரசியல் தன்மையுடனேயே முன்னெடுக்க வேண்டுமே தவிர, அதனை முஸ்லிம்களை மாத்திரம் பாதிக்கும் 'ஜனாஸா எரிப்புக்கெதிரான போராட்டமாக' குறுக்கி காயடிக்கத் துணை புரிந்து விடக்கூடாது. இதில் முஸ்லிம் சிவில் சக்திகளுக்கு முக்கிய கடமை உள்ளது.
எனவே இப்போராட்டத்தை ஏற்பாடு செய்பவர்களை இப்போராட்டத்தை கைவிடுமாறும் ஏனைய ஜனநாயகசக்திகளுடன் கைகோர்த்து-வெறுமனே மதபோராட்டமாகவன்றி- பரந்துபட்ட மக்களின் மனிதஉரிமைக்கான போராட்டமாக, கூட்டாக,முன்னெடுக்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறான பொதுபிரச்சினையை தனிப்பட்ட ஒருமதத்தின் பிரச்சினையாக மாற்றும் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்வதை தவிர்த்து, இனவாதத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய முயற்சிகளை முறியடிக்குமாறு, அறிவுபூர்வமாகவும், யதார்த்தமாகவும் சிந்திக்கும் அனைத்து மக்களையும் தோழமையுடன் வேண்டுகிறோம்.
ஒடுக்கப்படும் மக்களாக, ஐக்கியப்பட்டு முன் செல்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக