St CEYLONCNEWS: காலம்பிந்திய அவசரகால சட்டத்தின் மூலம் அரசாங்கம் யாரை பாதுகாக்க முற்படுகின்றது ?

புதன், 7 மார்ச், 2018

காலம்பிந்திய அவசரகால சட்டத்தின் மூலம் அரசாங்கம் யாரை பாதுகாக்க முற்படுகின்றது ?

எதிர்வரும் பத்து நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்தின்மூலம் பாதுகாப்பு படையினர்களுக்கு எந்த நேரத்திலும் சந்தேகத்தின் பேரில் எந்தவொரு பிரஜையையும் கைது செய்து வைத்திருப்பதுக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகின்ற எவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தாமல் விசாரணை என்ற போர்வையில் தடுத்து வைத்திருக்க முடியும். 

யுத்தம் நடைபெற்றபோது இந்த சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாட்டின் தமிழர்களாவார்கள். இதன் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்கள் இன்னமும் விடுவிக்கப்படாமல் நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றார்கள்.  

இந்த அவசரகால சட்டத்தினை ஏன் இவ்வளவு தாமதமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்பதுதான் இன்று எழும்புகின்ற கேள்வியாகும். 

அம்பாறையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்டும், முஸ்லிம்களின் கடைகளும், வாகனங்களும் எரிக்கப்பட்டு ஓர் இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டபோது இந்த சட்டத்தினை அவசரமாக பிரகடனம் செய்திருந்தால் கண்டி மாவட்டத்தில் ஏற்ப்பட்ட பாரிய வன்முறையினை தடுத்திருக்கலாம். அதனை முஸ்லிம்களும் வரவேற்றிருப்பார்கள். 

ஆனால் திட்டமிட்டபடி அனைத்து வன்முறைகளையும் அரங்கேற்றி முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை அழித்து முடித்தபின்பு இந்த சட்டம் எதற்கு என்பதுதான் இன்று எழும்புகின்ற கேள்வியாகும். 
சிங்களவர்களின் காடைத்தனத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் விரக்தியின் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சிங்களவர்களை பழிவாங்க கூடும். அவ்வாறு பழிவாங்க முற்படுகின்றபோது முஸ்லிம் இளைஞ்சர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கும்,  

இந்த இனக்கலவரத்தினால் நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கத்தின்மீது இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பினை தணிப்பதுடன், முஸ்லிம்களின் ஆதரவினை மீண்டும் பெற்றுக்கொள்ளும் பொருட்டும், 

மற்றும் சர்வதேச ரீதியில் நல்லாட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை திசை திருப்பும் வகையிலேயே இந்த அவசரகால சட்டத்தினை ஜனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக