St CEYLONCNEWS: இன்றைய கண்டி நிலவரம்

வெள்ளி, 9 மார்ச், 2018

இன்றைய கண்டி நிலவரம்

இயல்பு நிலைக்குத் திரும்பிய போதும், கண்டி மாவட்டத்தில் அச்சமான சூழ்நிலையில் இன்றைய வெள்ளிக்கிழமைத் தொழுகைகள் இடம்பெற்றன.

வழமையாக வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு வரும் மக்களின் தொகையை விடவும், குறைந்தளவாகவே இன்று மக்கள் பள்ளிவாசல்களுக்குச் சமுகமகளித்திருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், பெண்களை மட்டும் தனியே வீடுகளில் விட்டுச் செல்ல முடியாமலும், மற்றும் சிலர் நிர்க்கதி நிலையில் தஞ்சமடைந்துள்ளதாலும் அச்சம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுவகர்கள் எனப் பலருமாக அதிகளவினர் பள்ளிவாசல்களுக்குச் சமுகமளிக்காத நிலையே காணப்பட்டது.

பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டபோதும், தொடர்ந்து அச்சநிலையிலேயே மக்கள் வாழ்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊடரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது, பெரும்பாலானோர் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர். பெரும்பாலான கடைகளில் வெகுசீக்கிரமே பொருட்கள் தீர்ந்திருந்தமையும், மக்கள் சிரமத்திற்குள்ளானமையையும் காணக்கூடியதாக இருந்தது. 


மரக்கறிக்கடைகள், பழக்கடைகள் என்பவற்றிலும் பொருட்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டன. பழக்கடைகளில் உள்ள பழங்கள் பெரும்பாலும் அழுகியிருந்தன. இன்னும் சில நாட்கள் இந்நிலைமை தொடருமானால் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு கண்டியில் நிலவும் எனக் குறிப்பிட முடியும்.

ஹாரிஸ்பத்துவ தொகுதியிலுள்ள எண்டருதென்ன கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு இதுவரை போதியளவு நிவாரணம் சென்றடையவில்லை என அங்குள்ள பள்ளி நிருவாகம் மற்றும் நண்பர்களும் தெரிவிக்கின்றனர். அவசரமாக அப்பகுதியிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என இதுதொடர்பில் பள்ளி நிருவாகம் எதிர்பார்க்கின்றது. 

மிகவும் வசதி குறைந்த மக்கள் வாழும் இப்பகுதிக்கு, குருணாகல் வழியாக நான்காம் கட்டைப் பிரதேசத்தினூடாகச் செல்ல முடியும். அல்லது கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியினூடாக ரஜபிஹில்ல என்ற இடத்தினூடாகவும் செல்லமுடியும். 

- ஜே.எம். ஹபீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக