St CEYLONCNEWS: ரணில் விக்ரமசிங்க விடுபட முடியாது: அநுரகுமார திஸாநாயக்க

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

ரணில் விக்ரமசிங்க விடுபட முடியாது: அநுரகுமார திஸாநாயக்க

முறிகள் மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுபட முடியாது என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா, பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (6) தெரிவித்தார்.

மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில்,
ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள விடயங்களைத் தம்மால் புறந்தள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்று வருகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாம் எழுப்பிய கேள்விகளுக்கு இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வௌியாகும் வரை உரிய முறையில் பதில் அளிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் தாம் எழுப்பிய கேள்விகள் தொடர்பில் மத்திய வங்கிக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர் என்ற வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புடன் செயலாற்ற வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் பதில் அளித்தபோது போதியளவு கரிசனை கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயங்கள் நேர்மையானவை அல்லவென தெரிவித்த அவர், அந்த கருத்துக்கள் நேர்மையற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இனியும் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்தபோது, வேறு வழியின்றி சாத்தியமற்ற செயற்பாடுகளை பிரதமர் மேற்கொள்ள முயன்றதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மத்திய வங்கியின் ஆளுநர் இந்த மோசடியுடன் தொடர்புபடவில்லை என பிரதமர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

எனினும், இலாபமீட்டும் நோக்குடன் ஜனவரி 27 ஆம் திகதி நடைபெற்ற முறிகள் ஏலம் தொடர்பிலான உள்ளகத் தகவல்களை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.
முன்னாள் மத்திய வங்கி ஆளுநரைப் பாதுகாப்பதற்கு பிரதமர் பாராளுமன்றத்தில் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பிட்டிபன குழுவே இந்த ஊழலைக் கண்டுபிடிப்பதற்கு ஏற்ற கட்டமைப்பு என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாலும், அந்தக் குழுவிற்கு அதற்கான தகைமை இல்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க சபையில் கூறினார்.
நன்றி. நிவ்ஸ் பெஸ்ட்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக