ஏனைய சமூகங்கள் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி வீறு நடைபோடுகின்ற போது, நாமோ வெளிச்சத்திலும் உறங்கிக் கொண்டே இருக்கின்றோம் என வெலிகம நகர சபையின் புதிய தெரு வட்டாரத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் அஷ்பாக் மஹ்றூப் தெரிவித்தார்.
வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்
உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறுபான்மையினராகிய எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகவே விளங்குகின்றது. காரணம், மாத்தறை மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்துக்கோ. மாகாண சபைக்கோ தெரிவாகிச் செல்வது என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒரு விடயம்.
இந்நிலையில் வெலிகம நகர சபைக்கு மாத்திரமே முஸ்லிம் பிரதிநிதிகளை எம்மால் தெரிவு செய்ய முடியும்.
இன்று ஏனைய சமூகங்கள் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி வீறு நடைபோடுகின்றன. ஆனால் நாமோ வெளிச்சத்திலும் உறங்கிக் கொண்டே இருக்கின்றோம். இந்நிலை மாற வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் நாம் இன்னுமொரு விடயம் பற்றியும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள். எமது சமூகத்திற்கென நீண்டகாலமாக ஒரு பொருத்தமான தலைமைத்துவம் உருவாகவில்லை; உருவாக்கப்படவும் இல்லை. இப்படியே நாம் இருந்தால் எதிர்காலத்தில் எமது மக்கள் குறிப்பாக இன்றைய சிறுவர்களும் வாலிபர்களும் சகல துறைகளிலும் அனாதைகளாக்கப்படுவது நிச்சயம்.
அப்போது நாம் கண்ணீர் விடுவதில் எப்பயனும் தோன்றப்போவதில்லை. ஆகவே இச் சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமான செயல்.
இத்தேர்தல் கட்சிகளை வெல்லச் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு தேர்தல் அல்ல. எமது வட்டாரத்திற்கு அறிவோடும் துணிவோடும் சேவையாற்றத் தகுதியான ஒருவரைத் தெரிவு செய்யும் தேர்தல் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக