St CEYLONCNEWS: நன்மைகளை சூறையாடும் தொடரான பாவங்கள்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

நன்மைகளை சூறையாடும் தொடரான பாவங்கள்

மனிதன் தனது வாழ்க்கையை சரியான முறையில் வடிவமைத்துக்கொள்ள அவன் இரண்டு விஷயங்களை வேண்டிநிற்கிறான்.

         1. தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக ரீதியிலும் தேவைப்படும் உலகியல் சாதனம்.

        2. தனிவாழ்விலும், சமூக வாழ்விலும் அமைதியையும் நீதியையும் கட்டிக்காப்பதற்கு அவன் பெற்றுக்கொள்ள வேண்டிய கொள்கைகள் பற்றிய அறிவு.அந்தவகையில் இவ்வுலகையும், அதில் உயிரினங்களையும் படைத்து அவற்றை இரட்சித்து போஷிக்கும் ஏகவல்ல இறைவன் இவை இரண்டையும் நிறைவாகவே மனிதனுக்கு அருளியுள்ளான். இறைவன் அருளியுள்ள இவ்வுலகியல் சாதனங்களை அவன் விரும்பியவண்ணம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மனிதனின் ஆன்மீக மற்றும் சமூக கலாச்சார  தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அவனுக்கு கொள்கை பற்றிய அறிவை வழங்குவதற்காக அல்லாஹ் மனித இனத்திலிருந்தே தனது திருத்தூதர்களை தெரிவுசெய்தான். இவர்கள் மூலம் மக்களுக்கு தேவையான இறைவழிகாட்டல்களை அழித்தான். அந்த இறைவழிகாட்டல்கள் முழுமையான ஓரு வாழ்க்கைத்திட்டமாகும். இவ்வாழ்க்கைத் திட்டத்தையே நாம் இஸ்லாம் என்கிறோம்.

மனித வாழ்வை சீர்திருத்த வந்த அறுதியும் இறுதியுமான தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரிகள் காணப்படுகின்றன. ஒரு முஸ்லிமின் வாழ்வு இவ் அழகிய முன்மாதிரிகளை மையப்படுத்தியே சுழன்று கொண்டிருக்க வேண்டும். 
அவைகளை கூறுபோட்டு ஒதுக்கிவிடாமல் இருப்பதோடு அவர்கள் தடுத்தவற்றிலிருந்து முற்றுமுழுதாக விலகியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் வெறுத்த, ஒரு முஸ்லிமிடம் தஞ்சம் புகுவதற்கு கூட அனுமதியளிக்க முடியாத பாவமான தீய செயல்களாக தப்பெண்ணம் கொள்ளுதல், ஒருவருக்கொருவர் முரண்படுதல், கோபம் கொள்ளுதல், பொறாமை கொள்ளுதல், புறம் பேசுதல் மற்றும் கோல்மூட்டுதல் போன்ற அனைத்தையும் குறிப்பிடலாம்.

அல்லாஹ் தனது கலாமில் "சிறிதளவு தப்பெண்ணம் கொள்வதும் பாவமாகும்" என சூறா ஹுஜ்ராத்தில் குறிப்பிடுகிறான்.
இவ் அல்குர்ஆன் ஆயத்துக்கு பின்வரும் ஹதீஸ் மேலும் வலு சேர்க்கின்றது. "தப்பெண்ணம் கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், நிச்சயமாக  தப்பெண்ணம் என்பது அச்செய்தியையே பொய்ப்படுத்திவிடும். நீங்கள் ஒருவருக்கொருவர் பிழையாக எண்ண வேண்டாம். அது பற்றி விசாரிக்கவும் வேண்டாம். பொறாமைப்பட வேண்டாம். உங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ள வேண்டாம். ஒருவர் மற்றவரோடு கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம். நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாகவும் உங்களுக்கு மத்தியில் சகோதரர்களாகவும் இருங்கள்". இன்னொரு அறிவிப்பில் அதனோடு சேர்த்து  "ஒரு முஸ்லிமிற்கு அவனுடைய சகோதரனோடு மூன்று நாளைக்கு மேல் கோபித்துக்கொண்டிருப்பது  ஆகுமானதல்ல" எனவும் ஸஹீஹூல் புஹாரியில் இமாமவர்கள் பதிவுசெய்கின்றார்கள். 

சாதரணமாக மனிதனிடத்தில் பல்வேறுபட்ட  எண்ணங்கள் தோன்றுகின்றன. அவைகளை அவ்வப்போதே புதுப்பித்துக் கொண்டு நல்லெண்ணங்களை மாத்திரமே மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனதில் தப்பெண்ணங்களை வளரவிடுவதனாலேயே அடுத்தகட்ட பாவமான செயல்களுக்கு ஆளாகிறான்.

அல்லாஹுத்தஆலா சூறா ஹுஜ்ராத்தில் 12ம் ஆயத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். "நீங்கள் உங்களுக்குள் புறம் பேசவேண்டாம். அவ்வாறு புறம் பேசுவது அவர் இறந்த பிறகு அவருடைய மாமிசத்தை புசிப்பது போன்றாகும்". மேற்படி வசனம் புறம் பேசுவதை வன்மையாக கண்டிக்கிறது. இது இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

"ஒருமுறை நபி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்றார்கள். அக்கப்ரில் இருந்த இருவரும் மிகவும் வேதனை படுத்தப்பட்டுக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவர், தான் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவரும் மற்றவர் கோல்மூட்டித் திரிந்தவருமாவார்".
மேற்படி புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸ், கோல்மூட்டித் திரிபவர்களின் மரணத்துக்கு பின்னரான வாழ்க்கையை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வைக்கின்றது. நிச்சயமாக அவை இழிவான செயலாகும். அல்லாஹ்விடத்தில் அதிகம் துன்பம்தரும் வேதனையை பெற்றுத்தரும். அல்குர்ஆனில் புறம் பேசித் திரிதல் (غيبة)என்றும், ஹதீஸில் கோல்மூட்டித் திரிதல் (نميمة) என்றும் பயன்படுத்தப்படும் சொற்கள் இரண்டும் கிட்டத்தட்ட ஒருவர் இல்லாத  இடத்தில் அவரிடம் காணக்கூடிய குறைகளை ஞாபகப்படுத்தும் செயலையே குறித்து நிற்கின்றன.

இங்கு புறம் பேசுதலை இமாம்கள் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துவார்கள்.  'ஒருவருடைய உடல், ஆன்மீக, பண்பு  மற்றும் அசைவுகள் போன்றவற்றை மற்றவர்களிடம் சொல்லாகவோ, செய்கை மூலமாகவோ ஞாபகப்படுத்துவதால் உரிய நபர் அதனை வெறுப்பார். இவ்வாறு அவன் வெறுக்கக் கூடியதை ஞாபகப்படுத்துதலே புறம் பேசுதலாகும். 
மேலும் கோள் மூட்டுதல் என்பது ஒருவர் இல்லாத நேரத்தில் அவரின் செயலையோ பண்பையோ அவரிடம் காணப்படகூடிய ஒரு குறையாக  மக்களிடம் பகிரங்க படுத்துதலாகும். உண்மையில் குறிப்பிட்ட செயல் பண்பு அவரிடம் காணப்படாமலும் இருக்கலாம் இருந்தும் அது அவரிடம் காணப்படும் குறையென சொல்லித் திரிதல் கோள் மூட்டுதலாகும்.

இட்டுக் கட்டுதல் கோள் சொல்லுதல் குறையை தேடிப் பார்த்தல் குத்தி காட்டிப் பேசுதல் போன்ற கேவலமான செயலுக்கு கேடுதான்  என அல்லாஹ் தனது கலாமில் குறிப்பிடுகிறான். "கோள் சொல்பவன் ஒருபோதும் சுவனம் நுழைய மாட்டான்" என்ற நபி ஸல் அவர்களின் கூற்றை இமாம் புஹாரி தனது ஸஹீஹூல் புஹாரியில் கொண்டுவருகின்றார்.
 
மனிதன் ஒருபோதும்
விரும்பாத அவனுடைய  பலவீனங்களை பகிரங்கப்படுத்தும் இத்தீய செயல்கள் அம்மனிதனிடத்திலும் அதை கேட்கும் மக்களிடத்திலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இத்தீய செயலால் இதை கேட்கும் மக்களின் மனதில் அவர் பற்றிய கெட்ட அபிப்பிராயமே பதியப்படுகின்றது. ஆதலால் குறிப்பிட்ட இருவரும் மனக்கசப்புகளோடும் வெறுப்புகளோடுமே பயணிக்கும் நிலை உருவாகின்றது. 

இங்கு எந்தவொரு பாவமான செயலை எடுத்துநோக்கினாலும் மனதில் ஏற்படும் சிறுசிறு சஞ்சலங்களே அவனை அடுத்த கட்ட தீய செயல்களுக்கு தூண்டுகின்றன. அதாவது அவன் தப்பெண்ணம் கொள்வதாலேயே அது பற்றி மேலும் மேலும் விசாரித்து உளவு பார்க்க ஆரம்பிக்கிறான். பின்பு அதனை மற்றவர்களிடம் பகிரங்கபடுத்த முனைவதால் பல முரண்பாடுகள் தோன்றவும் செய்கின்றன. இதன் முதிர்ச்சி வடிவமாக பொறாமைப்பட்டு அவர்களுடன் கோபப்படவும் செய்கிறது. இறுதியில் கொலை துரோகம் போன்ற பாரதூரமான  விளைவுகளை கொண்டுவந்து சேர்க்கின்றது. விருட்சமாக வளர்ந்து கிடக்கும் இக்கொடிய பாவமான  தீய செயல்களுக்கு ஆணிவேர் தப்பெண்ணமாகும்.

எனவே எமது தூதரிடம் காணப்படாத தீய பண்புகளை நாமும் முற்றுமுழுதாக  தவிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறான இத்தீய பண்புகளில் இருந்து நாமும் விலகியிருந்து பிறருக்கும்  விலகியிருக்குமாறு நல்லுபதேசம் செய்யும் கூட்டத்தில் அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்குவானாக... ஆமீன்

நஸ்வி அஹ்மட்
ஷரீஆ பீடம் ,
பாதிஹ் கல்வி வளாகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக