St CEYLONCNEWS: இரவுகளை எதற்காக நேசிக்கிறோம் மர்யம்?? (கவிதை)

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

இரவுகளை எதற்காக நேசிக்கிறோம் மர்யம்?? (கவிதை)

இரவுகளை எதற்காக நேசிக்கிறோம் மர்யம்??
இரவுகளும் நம்மை நேசிப்பதாலா ??
உயிரே நேசமென்பது என்னடா??
ஆரவாரம் நிறைந்த நெடும் பாதைகளில்
அமைதியை வாசி்த்திருக்கிறாயா??
இன்று அதைத்தான் காணப் போனோம்.
இரவுகள் மொத்தமாக எத்தனை ஜாமங்களை உடையன??
அந்திம ஜாமம் கல்பு கலங்கும் தஹஜ்ஜத்துக்கு ஒதுக்குவோம்.
நெரிசல்களால் துவண்ட பாதை
நீயும் நானுமெனும் ஒரே உயிரின் நடையில் அழகாகிறது.
கடிகாரங்களின் காதலியே
நேரத்தைப் பார்த்தாயா?
என்னிடமும் கேட்கிறாயா?
உன்னுடனான நேரங்கள் எல்லாமே அழகானவைதானே.
சில்லூறின் இசையில் பாதை மருங்குகள் நீண்டு கொண்டன.
இதற்கு முன்னராய் வீதியைக் காணாத ஜீவனாகிக் குதிக்கிறாய்.
நானும்தான்
இத்தனை அழகாய்
இந்த வீதியைக் கண்டதேயில்லை.
சரி நட்சத்திரங்களுக்கு எப்படிடா போவது??
நானென்ன நட்சத்திரங்களின் அயல்வீட்டானா?
இளவரசிகள் நட்சத்திரங்களோடு பேசுவார்களா?
நட்ரசத்திரங்களும் பேசுமா?
"நட்சத்திரங்கள் வெள்ளை நிறமாமே"
நீ சொன்னால் சரிதான் ஆராய்ச்சி எனக்கெதுக்கு.
இப்போது
மேகங்களைத் தாண்டி மெல்ல நகர்கிறோம்.
நானொரு வீரனைப் போலவும்
நீயொரு அப்பாவி போலவும் என்னைப் பற்றிப் பிடிக்கிறாய்.
மேகங்கள் நீலமென்றாயடா?
இதென்ன கறுப்பாயிற்று?
ம்ம்ம்ம்
இது கார்மேகமா??
எப்போதும் சொல்வதுதான்
நீ சட்டத்தரணிதான் ஆகியிருக்கனும்.
நிலவேயில்லாத இரவு எத்தனை அழகானது பார்த்தாயா?
சொல்லும் போதே மழை பெய்தது.
"ஊரெல்லாம் வெள்ளம் வரட்டும்,நாங்க இங்கயே இருப்பம்"
தனிமையின் காதலி இப்படிச் சொல்கிறாய்.
இங்கயே இருக்கலாம்.
காலையானால் என்ன செய்வது?
சரி இங்கே என்பது எங்கு?
நட்சத்திரங்களைத்தானே..
காலை வருவதென்றால் என்ன நடக்கும் அன்பே மர்யம்?
நட்சத்திரங்களெல்லாம் எங்கோ போய் ஒழிந்து கொள்ளுமாம்.
நட்சத்திரங்களை விண்மீன்களென்று அழைப்போமா.?
சரி சம்மதம்டா.
என்னையும் பெயர் சொல்லி அழைக்கிறாய்.
என்ன பெயரது?
உனக்கு மட்டுமே சொந்தமானது.
இசை கேட்போமா?
ரபான் போல இனிமையான ஒன்றா?.
ஆம்ஸ்ரோங்கும் ஏதோ பாங்கோசை கேட்டாராமே?
அப்படித்தான் நானும் வாசித்தேன்.
வாசிப்புப் பித்தனே!
புதுமைப் பித்தனின் ஒரு நாள் கழிந்தது
வாசித்தாயா?
பெருந்துயரமான கதையடா அது.
நட்சத்திரங்களுக்குப் பசிக்காதா.?
நம்மைப் போல அதை யார் பாதுகாப்பது?
வேறு யாரடா அல்லாஹ்தான்.
பகலில் விண்மீன்கள் தெரிவதேயில்லை ஏன்?
நாம்தான் பகலில் பள்ளிக்கூடம் போய் விடுவோமே.
டேய் இந்த நட்சத்திரம் ஆம்புள நட்சத்திரம்டா, என்னப் பாத்து கண்ணடிக்குது.
ஆசயப் பாரு
இந்த பொம்புள நட்சத்திரம் எனக்கு கண்ணடிக்குது.
"கொல்லுவன் உன்ன"
நோகாமல் கொலை அச்சுறுத்தல் கொடுப்பது நமக்குப் புதிதில்லை.
பூமியிலும் இதைத்தான் செய்தோம் இப்போது வானத்திலும்.
அங்கிருந்து பார்க்க சின்னது போல
பக்கத்தில் பார்த்தால்
எத்தனை பெரிது பார்த்தாயா?
நீ
என்னைப் பார்த்த பார்வையில்
விண்மீன்களுக்கே வெட்கம் வந்தாயிற்று.
"கவிதை கவிதையா வருதுடா"
எனக்கு தூக்கம் தூக்கமா வருது.
தூங்கு மூஞ்சி இங்கயே தூங்குவம்டா.
சரி சரி
இங்கே என்பது எங்கே மர்யம்?
மின்மினி போல அழகை நிறைத்து கொள்ளை கொள்ளும் தெருதானே.
ம்ம்ம்
இந்த இரவு விடிந்து போகுமா?
விடிந்தாலும் நமக்கு இரவுதானே.
விடியாத இரவு பற்றி கவிதை எழுதுவாயா??
ம்ம்ம்
இன்ஷா அல்லாஹ்!

- அட்டாளச்சேனை நிஸ்ரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக