சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டு கிழக்கை ஏமாற்றும் நாடகம்
வை எல் எஸ் ஹமீட்
உரிமை அரசியலில் இருதரப்பும்
--------------------------------------------------------------
இன்று அவர் பிழை, எனவே என்பக்கம் வாருங்கள்; என்கிறார்கள், தான் எந்த வகையில் சரியென்று சொல்லாமல்.
அண்மையில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவை முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு அவற்றிற்கு ஆதரவாக கைஉயர்த்திய தலைவர்கள், உலகிலேயே முதன்முதலாக இலங்கையில்தான் கண்டிருப்போம்.
சரி கையுயர்த்தி விட்டார்கள். அதன் பின்னராவது அவற்றைத் திருத்த ஏதாவது முயற்சி எடுத்தார்களா? இல்லை. இந்நிலையில் அவர் பிழை, என்னுடன் வாருங்கள்; என்பதை என்னவென்பது.
இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டவுடன் சுமார் இரண்டு வாரங்கள் முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் நமது வீரவேங்கைகள் அவர்களுக்கெதிராக எழுதித் தள்ளினார்கள். அதன்பின் என்ன நடந்தது? அதை மறந்தே விட்டார்கள். தேர்தலுக்கு தயார் ஆனார்கள். கட்சிகளும் தயாராகின. இப்பொழுது அவர் பிழை, எனக்கு வாக்களியுங்கள்; என்கிறார்கள்.
இந்த சட்டத்தை மாற்றுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்கும்வரை உங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்; என்று கூறுவதற்கு இந்த சமூகத்திற்கு தெரிந்ததா? ஏமாந்த சமூகமா நாம்.
கிண்ணியாவில் வன்னி அமைச்சர்
--------------------------------------------------------------------
கிண்ணியாவில் வன்னி அமைச்சர், இத்தேர்தலில் அவருக்கு வாக்களிக்கட்டுமாம், தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு வருகின்ற ஆபத்துக்களைத் தடுப்பதற்கு; என்று தெரிவித்திருக்கின்றார். அவரிடம் கேட்க விரும்பவது
இத்தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தால் உங்கள் பாராளுமன்ற ஆசனங்கள் அதிகரித்து அதன்மூலம் தடுப்பீர்களா? அல்லது அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்றத்திற்குப் பதிலாக உள்ளூராட்சி சபைகளிலா திருத்தப்படும்? உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வாக்களித்தால் தீர்வுத்திட்டத்தில் ஏற்படுகின்ற பிழைகளை எவ்வாறு தடுப்பீர்கள்? அடுத்த கூட்டத்தில் பதில் கூறுவீர்களா? இல்லையெனில் ஏமாந்த சமூகத்தை மேலும் ஏமாற்றும் வார்த்தை இது எனக்கொள்ள முடியுமா? இல்லையெனில் ஏன்?
ஏற்கனவே, அவர் அரசியலமைப்பு சபையின் அங்கத்தவராக இருக்கின்றார். அதைப்பற்றி முகநூல்களில் அலாதியான விளம்பரமும் கொடுத்தார். அவர் அந்த சபையில் இருப்பதால் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக எதுவும் நடைபெறாது; என்பதுபோல் ஒரு பிரேமையை அந்த விளம்பரம் தோற்றுவித்தது. ஆகக்குறைந்தது அந்த சபையால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்ற முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களையாவது தடுத்து நிறுத்த முடிந்ததா? தடுத்து நிறுத்துவது இருக்கட்டும், அதில் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக என்னென்ன விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன; என்றாவது கூறமுடியுமா?
பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பு சபைக்கும் வித்தியாசம் தெரியாமல் பாராளுமன்றத்தில் பேசவேண்டிய மீள்குடியேற்றத்தை அரசியலமைப்பு சபையில் பேசுகின்ற ஒருவர் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு வரப்போகின்ற பாதிப்பைத்தடுக்க உள்ளூராட்சி சபையில் வாக்குக் கேட்கின்றார்; என்றால் இவரை என்னவென்பது? இவருக்குப் பின்னால் போகின்றவர்களை என்னவென்பது? தயவு செய்து சிந்தியுங்கள்.
ஆகக்குறைந்தது இவர் கூறட்டும்; தீர்வுத்திட்டம் தொடர்பான இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களுக்குப் பாதிப்பான விடயங்கள் எவை? அரசியலமைப்புச் சபையில் அங்கத்தவராக இருந்தும் ஏன் அவற்றைத் தடுக்க முடியவில்லை? உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்தால் எவ்வாறு அவற்தறைத்தடுப்பார்? அவ்வாறு கூறிவிட்டு அவற்றைச் செய்வதற்கு வாக்களியுங்கள்; என்று கூறட்டும். அதன் பின் மக்களும் வாக்களியுங்கள். தயவுசெய்து இந்த சமூகத்தை யாரும் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள்.
காணிப்பிரச்சினை
--------------------------------------
மருதமுனையில் பேசும்போது கிழக்குமாகாணத்தில் நிறைய காணிப்பிரச்சினை இருப்பதாகவும் அவற்றை ரவூப் ஹக்கீம் தீர்த்துவைக்கவில்லை; எனவும் எனவே, தனது அணிக்கு வாக்களிக்கும்படியும் கூறுகின்றார். ஆம், ரவூப் ஹக்கீம் காணிப்பிரச்சினை மாத்திரமல்ல இன்னும் பல பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவில்லைதான், மறுக்கவில்லை. இங்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால் ரவூப் ஹக்கீம் தீர்க்காததற்கு உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்; என்பதுதான். அதற்குரிய நியாயத்தைக் கூறினீர்களா? அல்லது கூறுவீர்களா?
எனது அணிக்கு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்தால் கிழக்கின் காணிப்பிரச்சினையைத் தீர்த்துத் தருவேன் என்கிறீர்களா? மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் பதினையாயிரம் ஏக்கர் முஸ்லிம்களின் காணிகள் பறிபோயிருக்குன்றன. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற ஆசனம் பெறப்படவில்லையா? ஏன் அந்தக் காணிப்பிரச்சினையைத் தீர்த்துக்கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தேர்தலில் வாக்களித்தும் தீர்த்துக்கொடுக்க முடியாமல்போன காணிப்பிரச்சினையை உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்தால் தீர்த்துக்கொடுப்பீர்களா? சிந்திக்கத் தெரியாத சமூகம் என்ற நினைப்பா? என்ன செய்வது சிந்திக்க முடியாத சில சகோதரர்கள் உங்கள் பின்னால் வருவதால் மொத்த சமுதாயத்தையும் அவ்வாறு எடைபோட்டு விட்டீர்கள்.
வடக்கின் காணிப்பிரச்சினை
-------------------------------------------------------
சரி, கிழக்கின் காணிப்பிரச்சினை ஒருபுறம் இருக்கட்டும். வன்னிமக்கள், குறிப்பாக முசலி மக்கள் எத்தனை தேர்தலில் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள்? 2001ம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் உங்களுக்குத்தானே வாக்களித்தார்கள். அவர்கள் வாழையடிவாழையாக வாழ்ந்துவந்த பன்னிரண்டாயிரம் ஏக்கர் காணிகளை 2012 ம் ஆண்டு ஒரு வர்த்தமானிப் பிரகடனத்தின் மூலம் பறிகொடுத்தார்களே! அவற்றை மீளப்பெற்றுக்கொடுத்துவிட்டீர் களா?
நீங்கள் வன்னியில் “ சாரதியும் நானே! ஓட்டுனரும் நானே!!” மூன்று மாவட்டங்களுக்கு இணைப்புக்குழுத்தலைவர். பிரதேச செயலக இணைப்புக்குழுக்களின் தலைவர். அப்படிப்பட்ட “ நானே” யான உங்களுக்கு உங்கள் மக்களின், உங்களுக்கு வாக்களித்த மக்களின் காணிகளை கபளீகரம் செய்த அந்த வர்த்தமானி பற்றி மூன்று வருடங்களாக தெரியவில்லை. அவ்வளவு தூரம் வாக்களித்த மக்கள் மீது அக்கறை உள்ள ஒருவர் கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினையை தீர்த்துக்கொடுப்பாராம் உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்தால்.
மஹிந்தவின் அரசில் பன்னிரண்டாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோயின. மைத்திரி அரசில் ஒரு லட்சம் ஏக்கர் காணிகள் பறிபோய் விட்டனவே! தடுக்க முடிந்ததா? அல்லது மீறப்பெற்றுத்தான் கொடுத்துவிட்டாரா? இவர் கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினைத் தீர்த்துக்கொடுப்பாராம். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பெருமை பேசுபவர் அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை வைத்து அவற்றைத் தடுக்க முடியவில்லை, மீளப்பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் உள்ளூராட்சி பிரதிநிதிகளைத் தரட்டாம் கிழக்கின் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெற்றுத்தருவாராம். முஸ்லிம்களெல்லாம் காது குத்தியிருக்கின்றார்கள்; என்ற நினைப்பா?
பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது; என்று நினைக்குமாம். அந்த நிலையிலா இருக்கின்றீர்கள்? துரதிஷ்டவசமாக நமது சகோதரர்களில் சிலரும் அந்த நிலையில் இருப்பது கவலையாக இருக்கின்றது. எந்த விசயத்தில் தான் கையறு நிலையில் இருக்கின்றாரோ அந்த விடயத்திலேயே அடுத்தவரை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவதும் அதே விடயத்தில் தன்னை ஜாம்பவானாக காட்டமுற்படுவதும் இந்த நாட்டில் இவரால் மாத்திரம்தான் முடியும்.
இழக்கப்பட்ட காணியின் பெயரால் அமைச்சுப் பதவி பாதுகாப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி பதிவியேற்று ஒரு சில மாதங்களில் ‘ தான் ஹெலிகாப்டரில் வில்பத்து பகுதியை சுற்றிப்பார்த்ததாகவும் வில்பத்துக்காடு அழிக்கப்பட்டிருப்பதாகவும்’ தெரிவித்திருந்தார். அப்பொழுது உரிய ஆவணங்களைக் கொண்டுபோய் ஜனாதிபதியைத் தெளிவுபடுத்தவில்லை. ஊடகங்களில் விளம்பரம் தேடியவர் ஏன் ஜனாதிபதியைத் தெளிவுபடுத்தவில்லை. ஏன்? இன்றுவரை பதிலில்லை. இது வாக்களித்த மக்கள் மீது அவரது அக்கறை.
அதனைத்தொடர்ந்து, ஒரு லட்சம் ஏக்கர் காணியை கபளீகரம் செய்கின்ற வர்த்தமானி வெளியிட ஒரு சில தினங்களுக்கு முன், ‘ வில்பத்துவைப் பாதுகாக்க வேண்டும்; அதனை அண்டியுள்ளவர்களை வேறு இடங்களுக்கு குடிபெயர்த்த வேண்டும்; என்று ஜனாதிபதி தெரிவித்தார். அப்பொழுதாவது ஜனாதிபதிக்கு நிலைமையை தெளிவுபடுத்தவில்லை. முஸ்லிம் சமூகத்திற்காக போராடுகின்ற, இரண்டாவது ‘ அஷ்ரப்’ என்று அடியாட்களை வைத்து தனக்குத்தானே விளம்பரம் தேடும் வீரன் தனது மக்களுக்காக போராடிய விதம் இது. மாறாக, ‘ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிக்கை விட்டார்.
உள்ளே இருக்கின்ற ஜனாதிபதியுடன் பேச முடியாது. ஆனால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவார். பதவிகளைத் தூக்கி வீசுவார். முற்றுகையிட்டாரா? பதவிகளைத் தூக்கிவீசினாரா? தன் சொந்தமக்களுக்கே இவ்வாறு துரோகம் செய்த ஒருவர் கிழக்கு மக்களுக்கு சேவை செய்யப்போகிறாராம். சிந்தியுங்கள்.
( நீளம் கருதி இதன் தொடர்ச்சி நாலாம் பாகத்தின் இரண்டாம் பகுதியாக வெளியிடப்படும்)
( தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக