வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி எரிகிறது.
இந்தப் புத்தகத்திற்கு ஆர். எஸ். எஸ். அல்லது சிவசேனா போன்ற காவி அமைப்புகள்தான் விருதை வழங்கியிருக்கவேண்டும். இலங்கை இ்ஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வாரி இறைத்து, இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பை அநியாயத்திற்கு நியாயப்படுத்தும் ஒரு பிரதிக்கு ஓர் இசுலாமிய அமைப்பே விருது வழங்கிக் கொண்டாடுவதை என்னவென்பது.
அதேபோல, அப்பட்டமான தமிழ் நாஸிக் குரலை ஒலிக்கும் இந்த நூலை வெளியிட்ட அரங்குகளில் பேசிய முற்போக்குக் கனவான்கள் மென்று முழுங்கியவாறு, இந்தக் குரலிற்கும் வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஓர் இடமிருக்கத்தான் செய்கிறது என்ற பாவனையில் பேசியபோது, அவர்களது நடுநிலையின் பின்னே மறைந்திருந்தது தமிழ் குறுந்தேசியவெறி அல்லது அப்பட்டமான அறியாமை என்பதையும் சொல்லிவிடுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் கிடையாது. அது ஏன் என்பதைக் கீழே விளக்கிவிடுகிறேன்.
ஜெப்னா பேக்கரியை மதிப்பீடு செய்யப் புகும்போது அதை ஒரு நாவல் இலக்கியமாகக் கொள்வதற்கு எந்தத் தடயங்களும் பிரதியிற் கிடையாது. தெளிவற்ற வாக்கிய அமைப்புகள், ஒரு பாத்திரத்தைக் கூட அரைகுறைப் பரிமாணமாகத் தன்னும் படைத்துவிட முடியாத இலக்கிய வறுமை, தமிழ் – இஸ்லாம் பாத்திரங்களின் உரையாடல்களில் கூட மொழி வழக்கு, பண்பாட்டு வேறுபாடுகளைத் துளியேனும் கொண்டிராத சவ எழுத்து, போதாததற்குப் பக்கத்திற்குப் பக்கம் எழுத்துப்பிழைகளும் நிறைத்து; வாசு முருகவேல் தனது தமிழ் நாஸி பேக்கரியில் சுட்ட அரைகுறைப் பாண் தான் இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகம் ஓர் ‘இலக்கியப் புனைவுப் பிரதி’ என்று வாசு முருகவேல் ஒருவேளை சொல்லியிருந்தால் நாம் இந்த ஆபாசத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்திருக்கலாம். என்னமோவொரு சாத்தியத்தை என்னமோவொரு கற்பனையில் அவர் உருவாக்கியிருக்கிறார் என நமக்கு நாமே ஒரு பின்நவீனத்துவச் சமாதானத்தைக் கற்பித்துக்கொண்டு அடங்கியிருந்திருக்கலாம்.
ஆனால் இந்தப் புத்தகத்தைத் தான் எழுதியதற்கு ஒரு பெரிய வரலாற்றுக் காரணம் இருப்பதாக வாசு நூலின் முன்னுரையில் சொல்லிக்கொள்கிறார். தமிழைப் பேசக்கூடிய முஸ்லீம்கள் தமிழர்களே அல்லாமல் அவர்கள் முஸ்லீம்கள் என்ற தனி இனமாக இருக்கவே முடியாது என்கிறார் வாசு. அவரது இந்த நாஸிக் கருத்தை இலங்கையில் இருக்கும் ஒரேயொரு முஸ்லீம் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சட்டரீதியாகவே முஸ்லீம்கள் தனித் தேசிய இனம்தான். எண்பதுகளிற்குப் பிறகு அவர்கள் அரசியல்ரீதியாகவும் வலுவான தனித் தேசிய இனமாக மாறியிருக்கிறார்கள். அவரவர் தாம் விரும்பிய அடையாளங்களை ஏற்கவும் துறக்கவும் முழுமையான உரித்துடையவர்கள். அவர்களிடம் போய் ‘நீ தமிழ் தேசிய இனம் தான்’ என்று அவர்கள் விரும்பாத அடையாளத்தை வலுகட்டாயமாகத் திணித்து மல்லுக்கு நிற்பது நாஸித்தனம். இது தலித்துகளையும் பழங்குடிகளையும் மற்றும் மூதாதை வழிபாட்டு மரபுள்ளவர்களையும் ஹிந்து என்ற பேரடையாளத்திற்குள் சங்கிகள் வலுகட்டாயமாக அடைக்க முற்படுவதைப் போன்றது. அல்லது மகிந்த சிந்தனை, அனைத்துச் சிறுபான்மை இனங்களையும் இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் திணித்து இனங்களின் தனித்துவங்களைக் காலி செய்வதைப் போன்றது.
இலங்கையின் வட பகுதியிலிருந்து முஸ்லீம்களைப் புலிகள் வெளியேற்றியது குறித்த உண்மைகளை உள்ளபடியே சித்திரிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என வாசு முன்னுரையிலேயே வீறாகப் பிரகடனப்படுத்திவிடுகிறார். ஆக அவரது சித்தம் இந்தப் புத்தகத்தின் மூலம் வரலாற்றுப் பொய்களை உடைத்துச் சுக்குநுாறாக்கி, இதுவரை பிரபாகரனோ, தமிழ்ச்செல்வனோ, ஆயிரம் பக்கங்கள் எழுதிக் குவித்த அன்ரன் பாலசிங்கமோ, அடேல் பாலசிங்கமோ முஸ்லீம்கள் வெளியேற்றம் தொடர்பாக வெளியிட்டிராத ஓர் உண்மையை நிறுவிக்காட்டுவதாக இருக்கிறது.
நான் மேலே குறிப்பிட்ட பெருந்தலைகளோ அல்லது புலிகளின் எந்தவொரு ஆவணமோ அறிக்கையோ இதுநாள்வரை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை விரட்டியதற்கு அவர்களிடையே 100 பேர்கள் இலங்கை அரசோடு கூட்டுச்சேர்ந்து ஆயுதங்களைப் பதுக்கிவைத்ததுதுான் காரணம் எனச் சொல்லியதில்லை. தமிழ்த் தேசியப் பார்வையைக்கொண்ட சேரன், நிலாந்தன், சயந்தன், குணா கவியழகன் போன்ற எழுத்தாளர்கள் கூட இந்தப் பழியை முஸ்லீம்கள்மீது சுமத்தியது இல்லை.
வடக்கிலிருந்து இஸ்லாமியர்களைப் புலிகள் விரட்டியது இன்றுவரை புலிகள் மீது அழிக்கமுடியாத இனச்சுத்திகரிப்புக் குற்றமாகவே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா. சம்மந்தன், சுமந்திரன் கூட அண்மையில், புலிகளை இந்தச் செயலிற்காகக் கடுமையாகக் கண்டித்து தமிழர்களின் சார்பில் முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்கள்.
முஸ்லீம்களது வெளியேற்றத்தைக் கண்டித்து எழுதிய ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அது நூறு பேருக்காவது குறையாமலிருக்கும். இந்த வெளியேற்றத்தைக் கண்டித்து “அழியட்டும் இந்நாடு/ அழியட்டும் எனது இனம்/ அழியட்டும் என் கவிதை/ அழியட்டும் எனது தமிழ்” என முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஐந்தாவது வருட நினைவு நிகழ்வில் வ.ஐ.ச. ஜெயபாலன் அறம் பாடியதை நாம் மறந்துவிட முடியயுமா என்ன!
புலிகள் கூட ஒப்புக்கு ஒரு மன்னிப்பைக் கோரியிருந்தனர். அண்மையில் ஒரு முஸ்லீம் தலைவர் “மறந்துவிடுகிறோம் ஆனால் மன்னிக்கமாட்டோம்” என மனம் நொந்து கூறியிருந்தார். ஹிட்லருக்கு மன்னிப்பு உண்டென்றால், சியோனிஸத்திற்கு மன்னிப்பு உண்டென்றால், குஜராத் படுகொலைகளிற்காக மோடிக்கு மன்னிப்பு உண்டென்றால், முள்ளிவாய்க்காலிற்காக ராஜபக்ஷவிற்கு மன்னிப்பு உண்டென்றால், புலிகளிற்கும் மன்னிப்பு உண்டு.
ஆக, மன்னிப்பே இல்லாத இந்தக் கொடுங் குற்றத்தை, இந்த வரலாற்றுத் தவறைத் தனது புத்தகத்தின் மூலம் நேர் செய்யவும் நியாயப்படுத்தவும் வாசு முருகவேல் மெனக்கெட்டிருக்கிறார். சூழவர கொஞ்சமேனும் அறமற்ற தகிடுதத்த எழுத்தாளர்களின் ஆதரவு முனகல்கள் வேறு. நாம் வாழுங்காலத்தில் நம் கண்முன்னே நிகழ்ந்த ஓர் இனச் சுத்திகரிப்புக் குற்றத்தை 28 வருடங்களிற்குள்ளாகவே, அற்ப பொய்களின் துணையுடனும் அறமற்ற மனிதர்களின் உசுப்பேற்றலுடனும் உடைக்கப் பார்த்திருக்கிறார் வாசு முருகவேல்.
நாவல் நிகழும் களம் யாழ்ப்பாணம். குறிப்பாக ஒஸ்மேனியாக் கல்லுாரியைச் சூழவரவுள்ள இஸ்லாமியர்கள் செறிந்தும் தமிழர்களோடு கலந்தும் வாழ்ந்த நிலப்பரப்பு. 1981 குடிசனக் கணக்குப்படி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் 14 ஆயிரத்துச் சொச்சம். புலிகளால் விரட்டப்பட்டபோது யாழ்ப்பாணத்தோடு சேர்த்து ஒட்டுமொத்த வடமாகாணத்திலிருந்தும் விரட்டப்பட் முஸ்லீம்கள் தொகை 78 ஆயிரம்.
1990 ஒக்டோபர் இறுதியில் வெளியேற, வெறும் சில மணிநேரங்கள் அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டு, அனைத்து அசையும் அசையாச் சொத்துகளையும் கொள்ளையிட்டு, ஆளுக்கு வெறும் 500 ரூபாயை மட்டும் எடுத்துச் செல்லப் புலிகள் அனுமதித்து அந்தச் இனச்சுத்திகரிப்பை நிகழ்த்திய பின்பு ஒருபோதும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓர் இஸ்லாமியர் கூட வாழ அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் இழந்த சொத்துகள் இழந்தவைதாம். அந்த மக்கள் புத்தளம் அகதிமுகாம்களில் பிச்சை நிவாரணத்தில் வாழ விதிக்கப்பட்டார்கள்.
ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் அரச கைக்கூலிகள் – காட்டிக்கொடுப்பாளர்கள் – துரோகிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் இயக்கங்களால் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு யாழ்ப்பாண முஸ்லீமை எந்த இயக்கமாவது கைதுசெய்த வரலாறோ கொலை செய்த வரலாறோ கிடையவே கிடையாது. மாறாக ஆயுதம்தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தில் கணிசமான யாழ்ப்பாண முஸ்லீம் இளைஞர்களும் இணைந்திருந்தார்கள் என்பதே வரலாறு.
யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் தங்களை எப்போதாவது தமிழர்களது விரோதிகளாகவோ எதிரிகளாகவே சொன்னதுண்டா! செயலாற்றியதுண்டா!! 1956-ல் கொழும்பில் வாழ்ந்த மேட்டுக்குடி முஸ்லீம் தலைவர்கள் சிலர் ‘முஸ்லீம்கள் இனி தமது மொழியாகச் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கைக்கொள்ள வேண்டும்’ எனச் சொன்னபோது அப்போது செனட் சபை உறுப்பினராகயிருந்த யாழ்ப்பாணத்து அறிஞர் ஏ. எம்.ஏ. அஸீஸ் ‘முஸ்லீம்களின் தாய்மொழி தமிழ்மொழி மட்டுமே’ என முழங்கியதை அவ்வளவு சீக்கிரமாகவா மறந்துபோவோம்!
ஈழப் போராட்ட வரலாறில், யாழ்ப்பாணத்து முஸ்லீம்களால் எந்தவொரு தமிழ்மகனும் இம்சிக்கப்பட்டதாகவோ காட்டிக்கொடுப்பட்டதாகவோ கொல்லப்பட்டதாகவோ வரலாறே கிடையாது. புலிகள் கூட முஸ்லீம்களை வெளியேற்றியபோது ‘அவர்கள் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கினார்கள், ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தார்கள்’ எனக் கூறியது கிடையாது. அப்படி எந்தச் சாட்சியங்களோ அறிக்கையோ ஆவணமோ கிடையாது என்பதை நான் முன்னமே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
இந்தக் குறையை நேர்செய்ய வாசு முருகவேல் போதிய பொய்ச் சாட்சியங்களோடு ஜெப்னா பேக்கரியில் களம் இறங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தோடு சேர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் செயற்பட்டார்களாம் (பக்கம் 31). அவர்கள் கத்தியால் அன்றாடம் தமிழர் வீட்டுக் கதவுகளைக் கொத்தத் தமிழர்கள் கத்தினார்களாம். ஏ யாழ்ப்பாணவாசிகளே! இப்படியொரு சம்பவத்தை எங்காவது நீங்கள் கேட்டதுண்டா? எங்காவது இது குறித்தொரு பதிவை நீங்கள் படித்ததுண்டா? அதுவும் இந்தப் புத்தகத்தில் யாழில் தமிழ் X முஸ்லீம் முரண் ‘கட்டமைக்கப்பட்டு’ இயங்கும் காலப்பகுதியில் (இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டவது வரையான நான்கு மாத காலப்பகுதியில்) இப்படி ஏதாவது நடக்க வாய்ப்பிருந்ததா? அப்போது யாழ்ப்பாண நகரத்தை பொறுத்தவரை முற்றுமுழுவதாக இலங்கை இராணுவம் முகாம்களிற்குள் முடக்கப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்குப் பகுதியில் முஸ்லீம் ஊர்காவல் படை, பாசறையென்றெல்லாம் ஏதும் இருந்ததில்லையே.
ஒஸ்மேனியா கல்லுாரியில் (வாசு உஷ்மேனியா என எழுதுகிறார்) படித்த முஸ்லீம் மாணவர்கள் இலங்கை அரசு கொடுத்த ஆயுதங்களைப் பதுக்கிவைத்துப் புலிகள் மீது பாய வளம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது நாவலின் அடுத்த சத்திய வார்த்தை. ஒஸ்மேனியா கல்லுாரியில் 12ம் வகுப்புவரைதான் இருந்தது. அங்கே மாணவர்களின் அதிகபட்ச வயது 18 -19 தான் இருக்கும். இவர்களா ஆயுதங்களைப் பதுக்கிவைத்தார்கள்?
இந்தச் சந்தேகம் வரக்கூடாது என்றுதான் நாவலில் ஒஸ்மேனியா கல்லுாரியை ‘உஷ்மேனியா பல்கலைக்கழகம்’ ஆக்கிவிட்டார் வாசு (பக்கம் 52). பல்கலைகழக மாணவர்களென்றால் ஆயுதத்தைப் பதுக்கிவைப்பதை நம்பக் கூடியதாக இருக்கும். என்னவொரு கற்பனைத் திறன்! இலங்கையில் முஸ்லீம்களிற்கு முதற் பல்கலைக்கழகத்தை வாசு அமைத்துக்கொடுத்திருக்கிறார்.
அதிகம் வளவளக்காமல் நேரடியாகவே புத்தகத்தின் Climax-க்கு வந்துவிடுகிறேன். ஒருநாள் திடீரெனப் புலிகள் யாழ்ப்பாணத்தில் 85 முஸ்லீம் இளைஞர்களையும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருந்த ஒரு தமிழரையும் கைது செய்கிறார்கள். இவர்களால் யாழ்ப்பாணத்து வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் இவர்களிற்கும் இலங்கை இராணுவத்திற்குமான தொடர்பையும் புலிகள் கண்டுபிடிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அனைத்து யாழ்ப்பாண முஸ்லீம்களையும் ஒஸ்மேனியா கல்லுாரிக்கு அழைத்த புலிகள்; குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் 2 மணிநேர அவகாசத்துள் யாழ்ப்பாணத்திலிருந்து அனைத்து உடமைகளையும் கைவிட்டு வெளியேறுமாறு துப்பாக்கி முனையில் ஆணையிட்டு வெளியேற்றுகிறார்கள்.
இந்த வெளியேற்றத்தை நம் காலத்தின் மாபெரும் கலைஞன் பிரசன்ன விதானகே தனது ‘August Sun’ திரைப்படத்தில் உள்ளது உள்ளபடி மாபெரும் துயரமாகச் சித்திரித்திருப்பார். சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அந்தக் கலைஞன் சித்திரித்த அதே சம்பவம், முஸ்லீம்களின் அதே தாய்மொழியைத் தனது தாய்மொழியாகவும் கொண்ட தமிழன் வாசு முருகவேலிடம் வரும்போது பொய்யும் வஞ்சகமும் நிறைந்து கோயபல்சுத்தனமான தமிழ் நாஸிச் சித்தரிப்பாக மாறிவிடுகிறது. முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு முஸ்லீம்களையே காரணமாக்கி அவர்கள்மீது காட்டிக்கொடுப்பாளர்கள் என்ற சுமையையும் ஏற்றிவைக்கிறார் வாசு.
வடக்கிலிருந்து கொள்ளையிட்டு அனைத்து முஸ்லீம்களையும் அகதிகளாக விரட்டி இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாக முடித்தபின்பு மக்களை முகம்கொடுத்த புலிகளது உறுப்பினர்களிடமிருந்தும் புலிச் சேவகம் செய்த சில எழுத்தாளர்களிடமிருந்தும் அவ்வப்போது சில வதந்திகள் கசியவிடப்பட்டன. இது புகழ்பெற்ற புலிகளின் பாணிதான் என்பதை எளிய அறிவுள்ளோர் கூட அறிவர். அனுராதபுரப் படுகொலை, அமிர்தலிங்கம் கொலை, ராஜினி திரணகம கொலை, செல்வி கொலை, சபாலிங்கம் கொலை, காத்தான்குடி பள்ளவாசல் படுகொலை, பொது இடங்களில் குண்டுவெடிப்புகள் போன்ற எல்லாவற்றிற்குப் பின்பும் புலிகள் வாய்மொழியாகக் காரண வதந்திகளைக் கசியவிட்டார்கள். ஆனால் இவை எதற்கும் சான்றுகளோ ஆதாரங்களோ இருக்காது.
ஆனானப்பட்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியே ஒருமுறை ‘ புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியதற்கு இனச்சுத்திகரிப்பின்றி வேறு காரணங்களுமிருக்கலாம்’ என்றொரு ஊகச் சமாளிப்பை வெளியிட்டார். ‘உங்கள் ஊகத்தின் மூலமெது? சான்றெது?’ என நாங்கள் அப்போதே பலமாகக் கேள்வி கேட்டோம். எனது ‘கொரில்லா’ நாவலிலும் இதைக் குறிப்பிட்டு பேராசிரியரைக் காய்ந்திருந்தேன். ஆயிரமாண்டுகால வரலாற்றுத் தொல் சான்றுகளைகளையெல்லாம் விரல் நுனியில் வைத்திருந்த பேராசிரியரிற்கு எங்கள் கேள்விக்குக் கடைசிவரை பதிலளிக்க முடியவில்லை.
சரி முஸ்லீம்கள் வெளியேற்றம் என்ற விசயத்தில் புலிகள் சொன்னது வதந்தியல்லாமல் சத்தியவார்த்தைகளே; அதைவாங்கியே வாசு முருகவேல் தன் பேக்கரியில் போண்டா சுட்டார் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும், 85 முஸ்லீம் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தார்கள் என்பதால் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஓர் இனத்தையே கொள்ளையிட்டுக் கட்டிய துணியோடு புலிகள் விரட்டியது நியாயமா? ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் இலங்கை அரசின் துணைப்படைகளாகவே யுத்தகளத்தில் நின்றபோது புலிகள் ஒட்டுமொத்தத் தமிழனத்தையுமா துரத்திவிட்டார்கள்? தமிழருக்கு ஒரு நியாயம் முஸ்லிம்களிற்கு மறு நியாயமா?
யாழ்ப்பாணம் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த அடுத்த 5 வருடங்கள்வரை ஏன் மீளவும் குடியேறுமாறு துரத்தப்படவர்களைப் புலிகள் அழைக்கவில்லை? புலிகள் பின்பொருநாள் யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றத்திற்கு கோரிய மன்னிப்பு இலங்கை அரசுடனான சமரசப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லீம்களது பிரதிநிதிகளும் தாங்களே, வடக்கு – கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என உரிமைகோருவதற்கானவொரு தற்காலிகத் தந்திர மன்னிப்பு இல்லையா? இல்லையெனில் மன்னிப்புக் கேட்ட பின்பும் இரண்டாயிரத்தின் நடுப்பகுதிகளில் மூதுாரிலிருந்து புலிகள் முஸ்லீம்களைத் துரத்தியடித்தார்களே, அந்த நடவடிக்கைகளில் முஸ்லீம்களைக் கொன்று போட்டோர்களே!
இவையெல்லாம் நடந்தது இனச்சுத்திகரிப்பு என நிறுவுகின்றனவா இல்லையா என இந்தப் புத்தகத்திற்கு நெருப்பு விருது வழங்கும் ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின்’ அருமைத் தோழர்கள் கேள்விகளை எழுப்பமாட்டீர்களா? புலிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் மீதான இன அழிப்பில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் தொகை ஏழாயிரம் எனச் சொல்கிறது 2016-08-03 தேதியிட்ட இலங்கை இஸ்லாமிய இதழான விடிவெள்ளி. இந்த இன அழிப்புகளிற்கும் மோடியின் முதல்வர் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் மீதான இன அழிப்புக்கும் என்ன வித்தியாசம் எனச் சிந்திக்கமாட்டீர்களா? உங்களது முதல் நெருப்பு விருது வாசு முருகவேலுக்கு என்றால் அடுத்த நெருப்பு விருது யாருக்கு? மோடிக்கா? ஹெச். ராஜாவிற்கா? அரவிந்தன் நீலகண்டனுக்கா?
II
முஸ்லீம்கள் மீதான தமிழ் இயக்கங்களின் -குறிப்பாகப் புலிகளின்- படுகொலைகளையும் தாக்குதல்களையும் பற்றிப் பேசும்போதெல்லாம் இந்தப் படுகொலைகளிற்கு நியாயம் தெண்ட அல்லது சமாளிக்க அல்லது தங்களது தமிழ் நாஸிக் குரலை நயம் குரலாக ஒலிக்க, கிழக்கில் தமிழர்கள் மீது ஊர்காவல் படைகளில் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞர்கள் நிகழ்த்திய படுகொலைகளையும் தாக்குதல்களையும் குறித்துச் சிலர் பேசுவதுண்டு. முதலில் ஒன்றை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஊர்காவல் படைகளிலிருந்த இஸ்லாமிய இளைஞர்களின் அட்டூழியங்களை முன்வைத்து நீங்கள் ஒருபோதும் புலிகளின் இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்திவிட முடியாது, நேர் செய்ய முடியாது.
புலிகள் முஸ்லீம்கள் மீது இழைத்த கொடுமைகளிற்காக தமிழ் சனநாயகச் சக்திகள் குரல் கொடுத்ததுபோல ஏன் தமிழர்கள் மீது ஊர்காவல்படை முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு எதிராக அதிகமான முஸ்லீம் முற்போக்காளர்கள் குரல்கொடுப்பதில்லை? என்பதும் அடிக்கடி கேட்கப்படும் இன்னொரு கேள்வி.
இதே கேள்வியை சில வருடங்களிற்கு முன்பு ஸர்மிளா ஸெய்யித்துடனான நேர்காணலில் நான் கேட்டேன். ஸர்மிளா இவ்வாறு பதிலுரைத்தார்:
“தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்.”
அதுதான் தோழர்களே! ஊர்காவல் படையென்பது இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. இலங்கை அரசின் வழிகாட்டலில் இயங்கிய படையது. இலங்கை அரசின் துணைப்படைக் குழுக்களாக எத்தனையோ தமிழர்கள் இயங்கவில்லையா? இந்திய அமைதிப் படையின் துணைப் படைகளாக தமிழ் இளைஞர்கள் இயங்கவில்லையா? அதறகான பழியை ஒட்டமொத்தத் தமிழினமுமா சுமக்க முடியும்! அதேபோல ஊர்காவல் படையில் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞர்கள் ஏற்படுத்திய இரத்தப் பழியை நாம் ஒட்டுமொத்த முஸ்லீம் இனத்தின் மீதும் சுமத்திவிட முடியாது.
அதேவேளையில் முஸ்லீம் சிந்தனையாளர்களோ எழுத்தாளர்களோ ஊர்காவற்படையிலிருந்த இஸ்லாமியர்களின் செயலை நியாயப்படுத்தி எழுதியாக ஒரேயொரு சொல்லை, பிரதியை உங்களால் காட்ட முடியுமா? மாறாகக் கண்டித்துப் பிரதிகள் உருவாக்கப்பட்டன. என். ஆத்மாவின் ‘உயிர் பிய்யுமோர் பாடல்’ கவிதையை நாம் மறந்துவிட முடியுமா! ஆத்மா நேற்று இப்படி எழுதியிருந்தார்:
“ஊர்காவல் படை என்பது அரச பாதுகாப்புப் பிரிவினால் உருவாக்கப்படும் தற்காலிக துணைப்படை. Shot gun வகைத் துப்பாக்கிகளும் அவற்றுக்கான சிறு எண்ணிக்கையான ரவைகளுமே இவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆயுதக் குழுக்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் ஊர்களிலும் எல்லைச் சிங்கள ஊர்களிலும் மக்கள் வேண்டிய பாதுகாப்பை வழங்க போதிய ராணுவம் இல்லாத நிலையில் குறித்த ஊர் பிரஜைகளைக் கொண்டு இவை உருவாக்கப்பட்டன. தாக்கப்படும் ஊரைக் காக்க ராணுவம் வந்து சேரும் வரையான தற்காப்பே ஊர்காவல் படையின் பொறுப்பு. பெரும்பாலும் இப்படைகளில் உள்ளூர் சண்டியர்களின் மேலாதிக்கம் இருந்தது, அரச படைகளுக்கேயுரிய மனோபாவங்களுமிருந்தன. முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தும் ‘மூன்றாம் படை’ யாக அவர்கள் தேறினர். அரச படையுடன் பொருதிய பலமிக்க ஆயுதக் குழுக்கள் இவர்களை மிக எளிதாக ஊர் ஊராக இரவிரவாக வேட்டையாடின. பதிலுக்கு அப்பாவித் தமிழ் மக்களை ஊர்காவல் படையினர் அவ்வப்போது பழி தீர்த்தனர். இதன் மூலம் முஸ்லிம் – தமிழ் பிளவு மறு பரிணாமமுற்றது. யுத்த பிரபுக்களின் இலட்சியங்களில் இதுவுமொன்று. கடைசியில் ஊர்காவல் படைகள் கலைக்கப்பட்ட போது எஞ்சியவர்கள் அரச இராணுவத்தில் உள்ளீர்க்கப்பட்டார்கள். இவர்களது அராஜகங்கள் தொடர்பாக வருத்தம் கோரும் தார்மீக் கடமை முஸ்லிம்களுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு உள்ளதா என்பது புரியவில்லை. அனைத்து பயங்கரவாத செயற்பாடுகளும் சமமான ஒருமித்த கண்டனத்திற்குரியவையே.”
அரசின் துணைப்படையாக இருந்த முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களிற்குப் பதில், அப்பாவி முஸ்லீம்களையும் குழந்தைகளையும் பெண்களையும் புலிகள் கொல்வதா? சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான பதில் செந்தமிழன் சீமான் சொல்வதுபோல சிங்களச்சிகளின் மார்புகளை அறுப்பதும் கொல்வதுமா? புலிகள் இதைச் செய்தார்களா இல்லையா! எத்தனையெத்தனைச் சிங்கள எல்லைப்புறக் கிராமங்களில் புலிகள் இத்தகைய வெறியாட்டங்களை நடத்தினார்கள். தோழர் சி. புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூலைத் தயவு செய்து படித்துப்பாருங்கள். தமிழர்கள் மீது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மட்டுமல்லாமல் புலிகளாலும் பிற தமிழ் இயக்கங்களாலும் அப்பாவிச் சிங்கள விவாசாயிகள் மீதும் முஸ்லீம்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் விரிவாகத் தொகுத்துச் சான்றுகளோடு ஆவணமாக அந்த நூலை அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
யாழிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்கு கற்பனையான ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்கும் வாசு முருகவேல், கிழக்கில் புலிகளால் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப்படுகொலைகளிற்கு என்ன நியாயம் சொல்லிப் புலிகளைக் களங்கமற்றவர்களாகக் காப்பாற்றுவார்? யாழில் முஸ்லீம்கள் துரத்தப்பட்டடதை மென்று முழுங்கி ஏற்று ஏப்பம்விடும் அறிவார்ந்த கூட்டம் கிழக்குக் கொலைகளிற்கு என்ன நியாயம் கற்பித்துப் புலிகளைக் காப்பற்றுவார்கள்? ‘பட்டிகொலோ கூல்பார்’ என இன்னொரு புத்தகம் வருமோ என்னவோ!
1990-ம் வருடம் மட்டும் புலிகள் முஸ்லீம்கள் மீது நிகழ்த்திய படுகொலைகள் குறித்து எஸ்.எம்.எம்.பஷீர் தொகுத்த ஒரு சுருக்கப் பட்டியல் இது (http://srilankamuslims.lk) :
· 2 ஜூலை 1990ல் 14 முஸ்லிம் விவசாயிகள் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை.
· 3 ஜூலை 1990ல் ஹஜ் பண்டிகைக்கு முந்திய மாலையில் சிவில் சமூகப் பிரமுகர்கள் தாவூத் அதிபர், அலி முஹம்மது ஹாஜியார், சமாதான நீதவான் கபூர் ஹாஜியார் ஆகியோர் விசாரணைக்கெனப் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலை.
· 7 ஜூலை 1990 புதூரில் 17 முஸ்லிம்கள் கொலை.
· 15 ஜூலை 1990ல் 19 பஸ் பிரயாணிகள் கிரான்குளத்தில் இறக்கிக் கொலை.
· 19 ஜூலை 1990ல் 69 ஹஜ் யாத்திரிகர்கள் அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஒந்தாச்சிமடத்தில் சுட்டுக்கொலை.
· 21 ஜூலை 1990ல் 7 முஸ்லிம் இரயில் பிரயாணிகள் மட்டக்களப்பில் தனியாகப் பிரித்தெடுத்துக் கொலை.
· 23 ஜூலை 1990ல் சம்மாந்துறை ஜாரியா பள்ளியில் தங்கியிருந்த 5 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
· 3 ஆகஸ்து 1990ல் காத்தான்குடி மீரானியா, ஹுச்சைனியா பள்ளிவாசலில்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 140 பேர் கொலை.
· 11 ஆகஸ்து 1990ல் ஏறாவூரில் 127 முஸ்லிம்கள் கொலை.
· 12 ஆகஸ்து 1990ல் சம்மாந்துறையில் வயல் வேலை செய்த 4 முஸ்லிம்கள் கொலை.
· ஆகஸ்து 1990ல் அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் கொலை.
இப்படியா ஒரு விடுதலை இயக்கம் வரிசையாகச் செய்திருக்கும்? என நீங்கள் சற்றேனும் சந்தேகமுற்றால் இந்தக் கொலைப் பட்டியலை நீங்கள் அய். நாவின் இலங்கை குறித்த அறிக்கையுடனோ வேறெந்த சர்வதேச மனிதவுரிமைகள் ஆணையத்தின் ஆவணக் காப்பகங்களிலோ இணையத்தளங்களிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.
ஆக, நடந்தது ஒரு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு. கிழக்கு மாகாண முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்து முஸ்லீம்களைப் போல பலவீனமான சமூகமில்லை. யாழ் முஸ்லீம்கள் வறியவர்கள். அவர்களிடையே அய்ந்தாறு சிறு முதலாளிகள் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்களெல்லாம் தையல் வேலை, சாய்ப்புக்கடைகளில் அணிமணி விற்பது, நடைபாதையில் பொருட்கள் விற்பது, கரையோர மீன்பிடிப்பு, கூலிவேலை போன்ற தொழில்களே செய்துவந்தார்கள். அவர்களிடம் அவர்கள் குடியிருந்த துண்டு நிலங்கள் மட்டுமேயிருந்தன. விவசாய நிலங்கள் இருக்கவில்லை. எவ்வித அரசியல் அதிகாரமும் அற்றவர்கள். அவர்களிற்கென்று ஓர் வலுவான அரசியல் பிரதிநிதித்துவம் அப்போது கிடையாது.
ஆனால் கிழக்கு வாழ் முஸ்லீம்கள் குடிசன எண்ணிக்கையிலும் சரி, நிலபுல உடமைகளிலும் சரி, பொருளியலிலும் சரி கிட்டத்தட்ட கிழக்கு வாழ் தமிழர்களிற்குச் சமமானவர்கள். இவர்களிடம் தங்களிற்கான தனித்துவ அரசியல் தலைமையும் ஓரளவு அரசியல் அதிகாரமுமிருந்தன. இவை இல்லாமல் இவர்களும் யாழ் முஸ்லீம்களைப் போன்று பலவீனமாக இருந்திருந்தால் கிழக்கிலிருந்தும் முஸ்லீம்கள் புலிகளால் விரட்டப்பட்டிருக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்தனவா இல்லையா!
கிழக்கில் முஸ்லீம்கள் மீது நிகழ்த்திய கொலைகளிற்கான முழுப் பொறுப்பையும் கருணா மீது சுமத்திவிட்டுப் புலிகளின் தலைமையை இந்த வரலாற்றுப் பழியிலிருந்து விடுவிக்கவும் ஓர் எத்தனத்தைச் சிலர் செய்வதுண்டு. இந்தக் கொலைகளில் புலிகளின் கிழக்குத் தளபதி கருணாவிற்கு நிச்சயமாகவே முதன்மைப் பொறுப்புண்டு. அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை நிகழ்த்திய பின்பும் 14 வருடங்கள் கருணா புலிகள் இயக்கத்தில் மிகப் பெரும் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஆகக் குறைந்தது இந்தச் செயலிற்காக கருணா பதவி இறக்கமாவது செய்யப்பட்டாரா? மாறாக இதற்குப் பின்பு கருணாவின் அதிகாரம் இயக்கத்திற்குள் மேலும் மேலும் வளர்ந்தது. இந்தக் கொலைகள் நிகழ்ந்து பத்தாண்டுகளிற்குப் பின்பு கிளிநொச்சி சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு வலப்புறம் அமர்ந்திருக்கும் பாக்கியத்தையல்லவா கருணா பெற்றிருந்தார். இந்தப் படுகொலைகளிற்கும் புலித் தலைமைக்கும் சம்மந்தமில்லை என்பதெல்லாம் புலிகள் இயக்க உட்கட்டமைப்பை அறியாதோர் கூற்று. இத்தனை கொலைகளையும் தடுத்த நிறுத்த வக்கற்றிருந்த தலைமையா பிரபாகரன்!
முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்கும் கூட்டுப்படுகொலைகளிற்குமான காரணத்தை வாசு முருகவேலின் வதந்திகளில் இருந்தல்லாமல், விடுதலைப் புலிகளது இறுக்கமான – சுத்தமான தமிழ்த் தேசிய இனவாதத்திற்குள்தான் நாம் கண்டடைய முடியும். மற்றமை எதையும் அங்கீகரிக்க மறுப்பது அவர்களது அரசியலின் அடிப்படை. பாஸிசத்தின் குணக்கூறு. புலிகள் முன்னெடுத்த தமிழ்த் தேசியத்திற்கு தொடக்க காலங்களில் ஒரு பகுதி முஸ்லீம்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும் காலப் போக்கில் -குறிப்பாக அவர்கள் பெரியளவில் வாழ்ந்த கிழக்கில்- தமக்கான தனித்துவ அரசியல் அடையாளத்தை முன்னெடுத்ததாலும் இலங்கையில் இனங்களிற்கு இடையேயான அதிகாரப் பகிர்வில் தமக்கான பங்கை அவாவி நின்றதாலும் வடக்கு – கிழக்கு மக்களிற்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற புலிகளது பிடிவாதத்தை முஸ்லீம் தலைமைகள் நிர்தாட்சண்யமாக நிராகரித்ததுமே முஸ்லீம்கள் மீதான புலிகளது காழ்ப்பிற்கும் பகைமைக்கும் காரணங்கள். அவர்களது அழிவு வரை இது தொடர்ந்தது. வடக்குக் கிழக்கில் புலிகளைத் தவிர வேறெந்த அரசியற் தலைமையையும் புலிகள் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவே இருந்தார்கள். ஏக பிரதிநிதித்துவ முழக்கத்தை பிரபாகரன் இறுதிவரை கைவிட்டாரில்லை.
ஜெப்னா பேக்கரியின் முன்னுரையில் ‘பொய்களை உடைத்து உண்மைகளை அறிவிக்கிறேன்’ என அறைகூவிய வாசு முருகவேல், புதிதாக எந்த உண்மைகளையும் நிரூபணம் செய்தாரில்லை. காலம்காலமாக நாங்கள் கூறிவரும் சாட்சியமான யாழிலிருந்து இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டதை அவர் மறுக்கவில்லை. புள்ள குட்டிகளுடனும் கட்டிய துணியுடனும் விரட்டப்பட்டதை அவர் மறுக்கவில்லை. அன்று புலிகளால் முஸ்லீம்கள் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு 500 ரூபாவை மட்டும் தம்மோடு எடுத்துச் செல்ல அனுமதிக்ப்பட்டு 2 மணிநேரத்திற்குள் வெளியேற்றப்பட்டதையும் அவர் மறுக்கவில்லை.
அவர் செய்ய முயன்றதெல்லாம் ஒரு ஆதாரமற்ற வதந்தியை முன்வைத்து இந்தக் கொடுமையான இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்த முயன்றதுதான். அவரது கதாபாத்திரமான ஹமீது, இந்த வெளியேற்றத்திற்குக் காரணமான புலிகள் மீதுதான் நியாயமாகக் கோபப்பட வேண்டும். அல்லது புலிகளின் இந்த இனச்சுத்திகரிப்பை மவுனமாக ஏற்றுக்கொண்டவர்களை அல்லது அதை நியாயப்படுத்தி எழுதிய வாசு முருகவேலைப் பார்த்துக் கொதிக்க வேண்டும். ஒரு நாஸி நாவலை எந்தப் பொறுப்புமில்லாமல் வெளியிட்ட ‘யாவரும்’ பதிப்பகத்தைக் கூட ஹமீது கோபிக்க நியாயமிருக்கிறது. இந்த நாஸிப் பிரதிக்கு விருது வழங்கும் அமைப்பைப் பார்த்து உரிமையுடன் கோபித்துக் கேள்வி கேட்கக்கூட ஹமீதிற்கு உரிமையிருக்கிறது. ஆனால் வாசு முருகவேலோ ஹமீதுவை ஒன்றுமறியா இஸ்லாமிய இளைஞர்கள் மீது ஏவிவிடுகிறார். யாழிலிருந்து வீடு வாசலைவிட்டு வெளியேறிக் கண்ணீருடன் போகும்போது ஹமீது, ஓர் இஸ்லாமிய இளைஞனின் வீட்டைப் பார்த்துத் திட்டுகிறார் ‘எல்லாம் இந்த வேச படையளால வந்தது’. இதுதான் இந்த நாஸி நாவலின் பொயின்ட், மையம், போக்குவரத்து எல்லாமே. புலிகளின் முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்கும் படுகொலைக்கும் காரணம் புலிகளல்ல. அதற்கான காரணம் இஸ்லாமியர்களே.
கோத்ரா ரயில் எரிப்பை முன்வைத்து குஜராத் படுகொலைகளை நியாயப்படுத்தி நாவல் எழுதலாம். தின்னவேலியில் வெடித்த கண்ணிவெடியே 1983 ஜூலைப் படுகொலைகளிற்கு காரணமென அரசை நியாயப்படுத்தி எழுதலாம். கொழும்பில் தமிழர்கள் குண்டு வைத்ததாலேயே கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இரவோடு இரவாக இலங்கை அரசு வெளியேற்றியது என நியாயப்படுத்தி நாவல் எழுதலாம். சமூகக் கேடுகளான இந்த நாஸிப் பிரதிகளை எதிர்த்து நிராகரித்து அம்பலப்படுத்தாமல், எல்லாத் தரப்புடனும் உரையாடுவோம் எனச் சூடு சுரணைகெட்டு இந்த நாவல்களையும் கொண்டுதிரிந்து பேசுவதும் இந்த நாஸிப் பிரதிகள் மீது இலக்கியப் பாரத்தை ஏற்றுவதும் இந்த நஞ்செழுத்துக்கெல்லாம் நீட்டிமுழக்கி நயம்பயமாக விமர்சன உரை நிகழ்த்துவதும் வீழ்ச்சி! ஒவ்வொரு ஈழத் தமினிற்குள்ளும் ஒரு இனவாதி இருக்கிறான் என மறுபடியும் முஸ்லீம்களை அஞ்ச வைக்காதீர்கள்.
வாசு முருகவேலின் நாஸிப் பிரதியில் சொல்லப்பட்ட பொய்களை மேலே சான்றுகளுடன் உங்களிற்குக் குறித்துக் காட்டினேன். தம்பி வாசுவிற்குச் சொல்ல ஒன்றிருக்கிறது:
நீங்கள் உங்கள் பொய்களை ஆயுதங்களாக முன்னிறுத்தியிருப்பது, ஓர் அதிகார அமைப்புக்கு எதிராகவோ ஓர் ஆயுதப் படைக்கு எதிராகவோ அல்ல. எந்த வலிமையுமற்ற, சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டு இன்றுவரை அகதிகளாக அலைந்துகொண்டிருக்கும் இஸ்லாமியர்களிற்கு எதிராக உங்கள் பொய்களை வரிசையான படைக்கலன்களாக நிறுத்தியுள்ளீர்கள். ஆனால் உங்களது படைக்கலன்களிற்கு எதிராக அந்த வஞ்சிக்கப்பட்ட ஏழை மக்கள் ஏந்தியிருக்கும் ஆயுதம் கூரிய வாளை ஒக்கும். சொந்த நிலத்திலிருந்து பெயர்த்துத் துரத்தப்பட்ட ஆயிரம் ஆயிரம் இஸ்லாமிய மக்கள் வடித்த கண்ணீரில் ஒருதுளி போதும் உங்கள் நாஸி அரசியலையும் உங்கள் நாசகார எழுத்தையும் தோற்கடிக்க!
-ஷேபாசக்தி
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக