St CEYLONCNEWS: இவர்கள் முஸ்லிம்களா? வினாதொடுக்கிறார் சுனில் அந்துன்நெத்தி

செவ்வாய், 30 ஜனவரி, 2018

இவர்கள் முஸ்லிம்களா? வினாதொடுக்கிறார் சுனில் அந்துன்நெத்தி

முஸ்லிம் அரசியல்வாதிகள் பணத்திற்காகவும், ஏனைய வாய்ப்பு வசதிகளுக்காகவும் மார்க்கத்தை விற்றுள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாழைச்சேனையில் இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக ஆறு உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் விடுதலை
முன்னணி கட்சி போட்டியிடுகின்றது. இங்கு போட்டியிடுவதற்கு சகல வாய்ப்புக்களும் கிடைத்துள்ளது.

இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இலங்கையிலே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தனியான கட்சியாக நாங்கள் தான் நிற்கின்றோம். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மரச்சின்னத்தை அடகு வைத்து விட்டு தேசிய முன்னணியில் போட்டியிடுகின்றார்.

ஆனால் நாங்கள் தனிக் கட்சியாக நின்று உங்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களின் உரிமை பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கட்சியாக நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

முஸ்லிம்கள் மக்கள் விடுதலை முன்னணியை கொமினிஸ் கட்சி என்று சொல்லுகின்றார்கள். அவ்வாறு நாங்கள் இல்லை. ஆனால் முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் முஸ்லிம்களாக நடந்து கொள்கின்றார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை.

இவர்கள் பணத்திற்காகவும், ஏனைய வாய்ப்பு வசதிகளுக்காகவும் மார்க்கத்தை விற்றுள்ளார்கள். அண்மையில் பிணைமுறி பிரச்சினையில் ரவி கருணாநாயக்க மற்றும் பிரதமர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாக நிறுத்தப்பட்ட போது இவர்கள் சத்தியத்தின் பக்கம் நிற்காமல் பொய்யின் பக்கம் நிற்கின்றனர்.

இவர்கள் உண்மையாக முஸ்லிம்களா அல்லது சத்தியத்திற்காக குரல் கொடுக்கின்ற பிணைமுறி மூலம் பல்லாயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்களை காட்டிக் கொடுத்த நாங்கள் மோசமானவர்களா? இதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் வாக்காளர்களாகிய நீங்கள் தான்.

நாங்கள் இனவாதக் கட்சி என்று கூறுகின்றனர். நாங்கள் இனவாதத்தை என்றுமே பேசியதில்லை. இனவாதத்தை பேசியிருந்தால், இனவாத வாக்குகளை மையமாகக் கொண்டிருந்தால் இலகுவாக பௌத்த வாக்குகளை பெற்று இந்த நாட்டில் ஆட்சி அமைந்திருக்கலாம்.

நாங்கள் எல்லோரும் நியாயமாக, நேர்மையாக மனிதத்துவமாக வாழ வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தில் இன ஒற்றுமைக்காக வேண்டி போராடுகின்றோம். அண்மையில் தென் இலங்கையில் ஏற்பட்ட இன முறுகலின் போது நாங்கள் உண்மையாக அதற்கான குரலை பாராளுமன்றத்தில் கொடுத்தோம்.

முஸ்லிம் பிரதிநிதிகள் வாய்மூடி இருக்க நாங்கள் தனியாக ஒரு நாள் தனிப்பட்ட விவாதத்தை நடாத்தினோம். இஸ்லாம் கூறுகின்றது மனிதத்துவம் முக்கியமானது அதில் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள் நேர்மையாக இருக்கின்றார்களா?

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஏழைகளுக்கு பல தீமைகள், வரிச் சுமை, சகலதும் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையிலே ஏழைகளுக்காக வேண்டி நீங்கள் தெரிவு செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் நாங்கள் இந்த நாட்டின் ஏழை மக்களின் நலனுக்காக போராடியிருக்கின்றோம்.

ஆனால் கட்சிக்காகவும், பணத்திற்காகவும் வாக்கு வேட்டையாடி வருகின்றவர்களை நீங்கள் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். நோன்பு காலத்தின் போது பேரிச்சம் பழத்திற்கு வரியை ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக இருந்த போது அதிகாரித்தார்.

இதற்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைவர்களான ரவூப் ஹக்கீம், றிஸாட் பதியூதீன் பேசாமல் பாராளுமன்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்த விடயத்தில் இதன் வரியை குறைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பேசியவர்கள் நாங்கள் தான்;. முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சியை உங்கள் பிரதேசத்தில் ஒருமுறை ஆட்சி செய்ய அதிகாரத்தை வழங்குங்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக