St CEYLONCNEWS: விரல் அடையாளத்தை விபரீதமாய் எண்ணும் ஆசிரியர்கள்!

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

விரல் அடையாளத்தை விபரீதமாய் எண்ணும் ஆசிரியர்கள்!

அலுவலகங்களில் நடைமுறையிலுள்ள விரல் அடையாளத்தை பாடசாலைகளில் அமுல் படுத்துகின்ற போது மட்டும் ஆசிரியர்கள் ஏன் அதனை வெறுப்புடன் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் ஆசிரியர்களைத் தவிர அனைவர் மனதிலும் ஆட்கொண்டுள்ளதை காண முடிகின்றது.
ஓர் ஆசிரியனாக விரல் அடையாளம் அமுல்படுத்தப்படுவதை நான் எதிர்க்கவில்லை. மாறாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்ற விரல் அடையாளம் ஏன் அனைத்து மாகாணங்களிலும் அமுல்படுத்தப்படவில்லையென அனைத்து ஆசிரியர்களின் மனதிலும் எழுந்துள்ள கேள்விக்கு விடைதேட
முடியாதவனாய், விரல் அடையாளத்தின் சாதக பாதகங்களை அதே பட்டதாரி நியமனத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்களுடன் ஒப்பீடு செய்து ஆராய விளைகின்றேன்.
முதலில், அலுவலர்களைப் போலன்றி 'ஆசிரியர்கள் அரை நாளே வேலை செய்கின்றார்கள்' என்ற பரவலான எண்ணக் கருவிலிருந்து அகல வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது.
அந்த வகையில் ஆசிரியர்கள் 7:30 தொடக்கம் 2:10 வரைக்கும் 6மணி 40 நிமிடங்கள் பகல்போசன இடை வெளியின்றிக் கடமையாற்றுகின்றார்கள். அதே வேளை அலுவலகங்களில் 9:00 தொடக்கம் 4:45 வரைக்கும் 7மணி 45 நிமிடங்கள் பகல் போசன இடைவேளை அடங்கலாக கடமையாற்றுகின்றார்கள். அநேகமானவர்கள் குறைந்தது ஒரு மணி நேரம் சாப்பாட்டுக்காக செலவு செய்கின்றார்கள். அப்படிப் பார்த்தால் அலுவலகங்களில் 6மணி 45 நிமிடங்களே வேலை செய்கின்றனர். இரண்டு தொடக்கம் இரண்டரை மணித்தியாலங்களை செலவு செய்து சாப்பாட்டுக்கு தினசரி வீடு சென்று வரும் அலுவலர்களும் (ஒரு சிலர்) இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாது அலுவலக வேலைகளை யாருக்கும் தினசரி வீட்டில் செய்வதற்கில்லை. ஆனால் ஆசிரியர்கள் தினசரி வீட்டிலிருந்து மறு நாளுக்கான பாடங்களை தயார் செய்ய வேண்டியவர்களாகவும் பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்புக்களை (scheme & lesson) எழுத வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அடுத்ததாக, முறையே நெகிழ்வு மற்றும் நெகிழ்வற்ற நேர வரையறைகளையும் அதன் மூலமான பாதகங்களையும் விளங்கி கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
காலை 8:00 தொடக்கம் 9:00 மணி வரையான ஒரு மணித்தியால நெகிழ்வுத்தன்மையான நேர வரையறை அலுவலர்களுக்கு இருக்கின்றது. ஆனால் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் 7:30 க்கு ஒரு செக்கனேனும் பிந்த முடியாத நெகிழ்வுத் தன்மையற்ற நேர வரையறையே காணப்படுகின்றது.
காலை 8:15 ஐ இலக்காகக் கொண்டு அலுவலகம் செல்கின்ற ஒருவர் வாகன நெரிசலோ அல்லது வேறேதேனும் இடையூறுகளின் காரணமாக 5 அல்லது 10 நிமிடங்கள் தாமதமாகினும் பதட்டமின்றிச் செல்வார். ஏனெனில் அவருக்கு அந்த நிமிடங்களை பிற்பகுதியில் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் ஆசிரியர்கள் காலை 7:30 ஐ இலக்காக கொண்டு செல்கையில் வாகன நெரிசல் மற்றும் ஏனைய இடையூறுகளை சந்திக்கின்ற போது பதட்டத்துக்குள்ளாகி தன்னையறியாமல் வாகனத்தை வேகமாகச் செலுத்துகின்ற சந்தர்ப்பங்களில் விபத்துக்களும் நேர்ந்திருக்கின்றது.
அலுவலக நேரங்களைக் காட்டிலும் பாடசாலை நேரங்களில் வாகன நெரிசல்கள் அதிகம். அதற்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களும் பாதைகளில் பயணித்துக் கொண்டிருப்பார்கள் தங்கள் பாடசாலையை நோக்கியவர்களாக. அதன்காரணமாக ஓரிரு நிமிடங்கள தாமதமாக வாய்ப்புக்களும் அதிகம்.
பாடசாலைக்குச் செல்லும் வழியில் சக ஆசிரியரோ அல்லது ஒரு பொது மகனோ சிறு இடையூறுக்குள்ளாகி சிறு உதவியினை எதிர்பார்த்து நிற்கின்ற போதும், ஒரு செக்கனேனும் தாமதமாக முடியாத நெகிழ்வுத்தன்மையற்ற நேர வரையறையின் காரணமாக மனிதாபிமானம் இழந்து பாடசாலைக்கு விரைய வேண்டிய நிர்ப்பந்தங்களையும் சில ஆசிரியர்கள் சம்பவித்திருக்கின்றார்கள்.
ஒரே முச்சக்கர வண்டியில் வருகின்ற மூன்று ஆசரியர்கள் ஏதேனுமொரு இடையூறின் காரணமாக இறுதி நிமிடத்தில் பாடசாலையை வந்தடைந்து விரலடையாளமிடும் போது முதலாமவர் 7:30 க்கு வைக்கின்ற போதும் ஏனைய இரு ஆசிரியர்களுக்கும் இயந்திரம் 7:31 ஐக் காட்டுகின்ற போது ( மூன்று தாமத நாட்களை சேர்த்து ஒரு அரை நாள் விடுமுறையாக கணிப்பிடப்படும்) அவ்வாசிரியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
மன உளைச்சலுக்கு உள்ளாகின்ற ஒரு ஆசிரியரினால் சிறந்த கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்க முடிவதில்லை. ஏனெனில் அலுவலகங்களைப் போன்று ஆசிரியர்கள் பயில்களுடன் போராடுவதில்லை. மாறாக ஆசிரியர்கள் மாணவர் மனங்களுடன் போராடுகின்றவர்கள். சிலவேளை மன உளைச்சல்கள் மாணவர்கள் மீது திணிக்கப்படவும் கூடும். இதன் மூலம் ஆசிரியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும் சந்தர்ப்பமுண்டு.
ஏதேனுமொரு வேலைப்பழுவின் காரணமாக ஒரு ஆசிரியருக்கு வழமைக்கு மாறாக 10 நிமிடங்கள் தாமதமாயின், குறிப்பிட்ட நேரத்துக்கு (7:30) பாடசாலையை அடைய முடியாதெனக் கருதி அவ்வாசிரியர் அந்த நாளை விடுமுறையாக்கக் கூடும். எனவேதான் நெகிழ்வுத் தன்மையற்ற நேரம் சலுகைக்காக வழங்கப்பட்டிருக்கும் அனைத்து விடுமுறைகளையும் எடுப்பதற்கு காரணமாகிவிடக் கூடிய சாத்தியம் அதிகமே. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
அலுவலகங்களைப் போன்று ஆசிரியர்களுக்கும் குறைந்தது 15 நிமிடங்களேனும் நெகிழ்வுத்தன்மை வாய்ந்த நேர வரையறை இருக்குமாயின், அதிகமான பிரச்சினைகளை குறைக்க முடியுமென்பது எனது கருத்து. ஆயினும் பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் நடைமுறைச்சாத்தியம் இல்லாதொன்றாகவே நெகிழும் தன்மை வாய்ந்த நேர அமைப்பு காணப்பட்டாலும், விரலடையாளத்தை நடைமுறைப்படுத்திய மேலதிகரிகளுக்கு அதன் மூலம் எதிர் கொள்ளப்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுத்தரமுடியுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
-பாஸித் மருதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக