St CEYLONCNEWS: சிறுவர்களும், டியுசன் வகுப்புகளும்..!

சனி, 20 ஜனவரி, 2018

சிறுவர்களும், டியுசன் வகுப்புகளும்..!

உணவு எவ்வாறு சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மூளையின் செயற்பாட்டிற்கும் அவசியமோ அதே போன்றே விளையாட்டும், பொழுதுபோக்கும் சிறுவர்களுக்கு முக்கியமானதாகும். கடந்த காலங்கள் போலன்றி சிறுவர்கள் விளையாடுவது தற்காலத்தில் கணிசமான அளவு குறைந்துள்ளது அல்லது முற்றாக இல்லாமல் போயுள்ளது. இதற்கு தொழில்நுட்ப சாதனங்கள் குறை கூறப்பட்டாலும் வேறுபல காரணங்களும் பிரதானமான காணப்படுகின்றன.

அவைகளில் சிறுவர்களின் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் முக்கியமானதொன்று கல்வி என்ற பெயரில் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் டியூஷன் வியாபாரமாகும்.  முதலாம், இரண்டாம் வகுப்புகளில் கல்விகற்கும் சிறார்கள் கூட டியூஷன் சென்றால்தான் கற்கமுடியும் என்ற நிலைமைக்கு டியூஷன் வகுப்புகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிறார்கள் ஒன்றுசேர்ந்து ஆட்டோக்களில் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வது சர்வசாதாரன காட்சியாகிவிட்டது. பாடசாலைகளில் சேர்க்கப்பட்ட முதல் நாளிலிருந்தே சிறுவர்கள் டியூஷனுக்கு சென்றால்தான் கல்வியில் சிறந்து விளங்க முடியும், பரீட்சைகளிலும் சித்திபெற முடியும் என்ற மனோநிலைக்கு பெற்றோர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து சிறார்களும் டியூஷன் செல்லும் போது எனது குழந்தைகளும் செல்லாவிட்டால் ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையமாட்டார்களோ என்ற பயமும், எம்மைப் பற்றி மற்றவர்களும், சமூகமும் என்ன நினைக்குமோ என்றதொரு தாழ்வு மனப்பான்மையும் பெற்றோர்களுக்கு. சிறுவர்களும் இதே நிலைமையில். இந்த நிலைமைக்கு சிறுவர்களையும், பெற்றோர்களையும் இட்டுச்சென்றது பாடசாலைகளில் முறையாக பாடம் கற்பிக்காமல் அரசின் இலவச ஊதியத்தில் காலம்கடத்திக் கொண்டும், மிகவும் கண்ணியமான தொழிலான ஆசிரியர் தொழிலை வியாபாரமாக மாற்றியமைத்த சில ஆசிரியர்களாகும்.

இதன் விளைவு சிறுவர்களுக்கு ஓய்வு நேரம் கிடையாது. விளையாட்டிற்கும், பொழுதுபோக்கிற்கும் நேரமில்லை. மன உழைச்சல். டியூஷன் செல்வதே பொழுதுபோக்காக மாற்றப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளியும், வீட்டுப் பணிப்பெண்ணும், விதவையும் உண்ண உணவு இல்லாவிட்டாலும் தங்களது குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை. அரசின் இலவச கல்வி திட்டம் சிறுது சிறுதாக ஒரு வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதோடு, அர்த்தமற்றதாகி கொண்டிருக்கின்றது. இவ்வாறு டியூஷன் சென்றுதான் கல்வி கற்க வேண்டுமென்றால் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் கட்டப்பட்டுள்ள பாடசாலைகளும், அதற்காக இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் திணைக்களங்களும், அதிகாரிகளும்,அதற்கென ஒரு அமைச்சும் எதற்காக? புத்தகங்களையும், பாடத்திட்டங்களையும் விநியோகம் செய்துவிட்டு, டியுஷன் சென்று கற்றுக் கொள்ளுங்கள் என அரசு அதன்பாட்டில் இருக்க முடியுமே.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் குறைந்தபட்சம் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்யும் வரையிலான சிறுபிராயமே மிகவும் சந்தோஷமானதும், பொண்ணானதுமான காலமாகும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இந்தக் காலம் மீண்டும்  கிடைக்கப்பெறமாட்டாது. இப்படிப்பட்டதொரு காலம் டியூஷன் வியாபாரிகளாலும், பெற்றோர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிய கல்வியாண்டு தொடங்கி இரண்டு வாரங்களேயான நிலையில் டியூஷன் வகுப்புகளும் ஆரம்பித்துவிட்டது. மிகப்பெரும் வருமானம் தரும் தொழிலாக டியுஷன் வியாபாரம் மாறியுள்ளது.    

பாடசாலைகளில் முறையாக கற்பிக்காத ஆசிரியர்களையும், அதிபர்களையும் கேள்வி கேட்க தைரியமில்லாத கோழைகளாகவும், எந்தவித சிந்தனைகள் இல்லாமல் தங்களது சிறுவர்களின் வாழ்வை தாங்களே நாசமாக்கும் மடையர்களாகவும் பெற்றோர்களும், சமூகமும் மாற்றமடைந்துள்ளது.

வாரத்தில் ஐந்து நாட்கள் ஆறு மணி நேரம் பாடசாலைகளில் சிறுவர்கள் கழிக்கும் நேரத்திற்கும் மேலதிகமாக,சிறுவர்களின் நேரமானது அநீதியாகவும், நியாயமற்ற முறையிலும் ஆக்கிரமிக்கப்படுவதோடு, சிறுவர்களின் உணர்ச்சிகளும், உணர்வுகளும் மதிக்கப்படாமல் ஒரு ஜடப்பொருளாக கையாளப்படுகின்றனர். சிறுபிராயம் மதிக்கப்படவேண்டும், சுதந்திரமாக வாழ சிறுவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பெற்றோர்களினதும், டியூஷன் வியாபாரிகளினதும் ஆக்கிரமிப்பிலிருந்து சிறுவர்கள் மீட்கப்பட வேண்டும். கல்விதான் வாழ்க்கை, கற்றால்தான் வாழ்க்கை, பாடசாலைப் பாடங்கள் மட்டும்தான் வாழ்க்கைக்கு உதவும் என்ற மடத்தனமான கொள்கைகளிருந்து பெற்றோர்களும், சமூகமும் மீள வேண்டும்.

இன்று பெற்றோர்களாக இருக்கும் அனைவரும் இவ்வாறு இரவிலும் பகலிலும் வார இறுதி நாட்களிலும் டியூஷனுக்கு சென்றா கல்வி கற்றீர்கள். முன்பு இருந்ததைவிட இன்று பாடத்திட்டங்கள் மிகவும் சிறந்ததாக உள்ளதே. இன்று சிறுவர்கள் 80ஆம் 90ஆம் ஆண்டு காலங்களில் வாழ்ந்த சிறுவர்களைவிட மிகவும் புத்திசாலியானவர்களாகவும், விவேகமானவர்களாகவும் உள்ளனரே. இன்று இணையத்தில் அனைத்து தகவல்களும் மிக இலகுவாக கிடைக்கின்றதே. நிலைமை இவ்வாறு இருக்கும் போது ஏன் இந்த கொடிகட்டிப்பறக்கும் டியூஷன் வியாபாரமும், சிறுவர்களுக்கு இப்படி ஒரு அநியாயமும்?  

மேற்குறிப்பிட்டவாறு சிறுவர்களின் நேரம் ஆக்கிரமிக்கப்படுவதால் முறையாக உரிய நேரத்தில் போதுமான அளவு   உணவருந்தக்கூட நேரமில்லாமலும், இரவில் கண்விழித்து கற்க வேண்டிய நிலைமைக்கும் சிறுவர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு அல்சர், இரத்த சோகை, மன உழைச்சல், போதிய தூக்கமின்மையால் தலைவலி. சிறுபிராயத்திலேயே சிறுவர்கள் நோயாளிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கான முற்றுமுழுதான காரணம் பெற்றோர்களாகும்.

சிறுவர்களின் ஆரோக்கியத்துடன் தொடர்பான மற்றுமோர்விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவின்படி ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகின்றதெனில், அவரின் உடம்பில் இன்சுலின் அதிகரிப்பால் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சினை பத்து தொடக்கம் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது என்பதாகும். இவ்வாறு அதிக இன்சுலினுக்கு காரணம் உடம்பில் அதிகரித்த சக்கரை அளவாகும். அதிக சக்கரைக்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு கலாச்சாரமும், போதிய உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், போதுமான தூக்கமின்மை என்பதாகும்.

உதாரணமாக ஒருவருக்கு 35 வயதில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றதெனில் அவரின் உடம்பில் சக்கரையின் அதிகரிப்பால் இன்சிலின் அதிகரிப்பு அவரின் இருபது வயதிலேயே ஆரம்பித்துவிட்டது என்பதாகும். இவ்வாறு தங்கள் சிறார்களை நோயாளிகளாக்கிய பெருமை பெற்றோர்களையே சாரும்.

சிறுவர்கள் அனைத்தையும் கற்கத்தான் வேண்டும். அதற்காக ஏன் அவர்களின் ஒய்வு நேரங்களிலும், சந்தோஷமாக விளையாட வேண்டிய மாலை நேரங்களிலும் உங்களி்ன் வியாபாரங்களையும், உங்களின் நிகழ்ச்சி நிரல்களையும் அவர்களின்மேல் திணிக்க வேண்டும். 

சில குறிப்பிட்ட பாடங்களுக்கு ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்கும் சிறுவர்கள் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதை அவசியமாக கருதலாம். ஆனால் இன்றை நிலைமை அவ்வாறில்லை. முதலாம் வகுப்பிலிருந்து அனைத்து பாடங்களுக்கும் டியூஷன். இது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே மிகவும் அதிகமாகும். சிந்திப்போம் செயல்படுவோம். சிறுவர்களை கொண்டாடுவோம். 

-Abu Ahmed

1 கருத்து:

  1. வரவேற்கத்தக்க - காலத்திற்குப் பொருத்தமான சிறந்த கட்டுரை. கட்டுரையாளரின் கட்டுரைகளுக்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு