St CEYLONCNEWS: பண மோசடியில் ஈடுபட்ட ஈரானியர் இருவரும் கைது!

சனி, 20 ஜனவரி, 2018

பண மோசடியில் ஈடுபட்ட ஈரானியர் இருவரும் கைது!

மாரவில - கடுநேரிய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் 28000 ரூபா பெறுமதியான பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டு சென்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவரை மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (19) இரவு, நீர்கொழும்பு - ஏத்துக்கால பிரதேச வெளிநாட்டு ஹோட்டல் ஒன்றில் வைத்தே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
கைதுசெய்யப்பட்டுள்ள ஈரான் நாட்டவர் இருவரும் சென்ற 13 ஆம் திகதி மாரவில - கடுநேரிய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குச் சென்று, அங்குள்ள ஊழியரிடம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை விசாரித்துள்ளனர். பிறகு அவ்வூழியரின் கையிலிருந்த 5000 ரூபா நோட்டைப் பார்ப்பதற்கு ஆசையாக இருப்பதாகக் கூற, அவ்வூழியரும் பார்க்கலாம் எனக்கூறிக் காட்டும்போதே அவரிடமிருந்த பணத்தொகையிலிருந்து குறித்ததொரு தொகையை சூட்சுமமாகப் பெற்று அவ்விடத்திலிருந்து விரைவாக நகர்ந்துள்ளனர். 

இவ்வெளிநாட்டவர் இருவரும் ஏற்கனவே13 ஆம் திகதி வென்னப்புவ - கோப் சிட்டி வியாபார நிலையத்திலிருந்தும், ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி சிலாபத்திலுள்ள ஆடையகம் ஒன்றிலிருந்து இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஈரானியர் இருவரும், நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகப் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சீசீரிவியின் உதவியுடன் இவ்விருவரையும் கைதுசெய்துள்ள  மாரவில பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக